விடுதலைபெறும் தமிழ் அரசியல் கைதிகளின் வாழ்வாதார மேம்பாட்டிற்கு உதவு முன்வரவேண்டும் - பிரசன்னா இந்திரகுமார்

விடுதலைபெற்றுவரும் தமிழ் அரசியல் கைதிகளின் வாழ்வாதார மேம்பாட்டிற்கு எமது புலம்பெயர் உறவுகளும்,பொது அமைப்புகளும் உதவ முன்வரவேண்டும் என கிழக்கு மாகாணசபையின் பிரதித்தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் தெரிவித்தார்.


இன்று திங்கட்கிழமை விடுதலைசெய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதியை அவரின் இல்லத்தில் சந்தித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலைசெய்யப்பட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.அவர்களின் விடுதலைக்கான நடவடிக்கையினை எடுத்துள்ள இந்த நாட்டின் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.

விடுதலைசெய்யப்பட்டு மட்டக்களப்புவரும் தமிழ் அரசியல் கைதிகளின் எதிர்காலத்திற்காக அவர்களுக்கு கிழக்கு மாகாணசபை ஊடாக சுயதொழில் நிதிகளை வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்தினை ஊக்குவிப்பதற்கான என்னால் முடிந்த உதவிகளை செய்யவுள்ளேன்.

இதுபோன்று தமிழ் அரசியல் கைதிகளின் வாழ்வாதார மேம்பாட்டிற்கு எமது புலம்பெயர் உறவுகளும்,பொது அமைப்புகளும் உதவ முன்வரவேண்டும்.

இதேநேரம் இந்த நாட்டின் ஜனாதிபதி அவர்கள் சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள அனைத்து தமிழ் அரசியல் கைதிகளையும் விடுதலைசெய்வதற்கான நடவடிக்கையினை எடுக்கவேண்டும்.