தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி பொதுச்செயலாளருக்கு மீண்டும் விளக்கமறியல்

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் பொலிஸாரால்  தடுத்து வைக்கப்பட்டுள்ள   ,தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் (வுஆஏP) கட்சியின்  பொதுச் செயலாளரான பூபாலப்பிள்ளை பிரசாந்தன் மீதான தடுப்பு உத்தரவு மட்டக்களப்பு  மஜிஸ்திரேட் நீதிமன்றத்தினால்  டிசம்பர் 01ஆம் திகதி வரை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.


மட்டக்களப்பு ஆரையம்பதி பகுதியில்  2008ம் ஆண்டு  டிசம்பர் மாதம் 29ம் திகதி  அரசாங்க படசாலையொன்றின் ஆசிரியரான தமிழ்நாடு என அழைக்கப்படும் கிருஸ்ணபிள்ளை மனோகரன்  உட்பட இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

குறித்த கொலைச் சம்பவம் தொடர்பாக  கிருஸ்ணபிள்ளை மனோகரனின் சகோதரியொருவர் காத்தான்குடி பொலிஸாருக்கு அளித்திருந்த வாக்கு மூலமொன்றை அளித்திருந்தார்.

குறித்த வாக்கு மூலத்தையடுத்து விசாரனைகளை மேற் கொண்டிருந்த காத்தான்குடி பொலிஸாரால் பூபாலப்பிள்ளை பிரசாந்தன் கைது செய்யப்பட்டிருந்தார்.

இதன் பிரகாரம்  தடுத்து வைக்கப்பட்டிருந்த அவர் இன்று  செவ்வாய்க்கிழமை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார்.

விசாரனைகள் தொடர்ந்தும் இடம் பெற்று வருவதால் தடுப்பு உத்தரவை நீடிக்க நீதிமன்ற அனுமதி கோரி பொலிஸார் முன் வைத்த அறிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதி எம். எம். என். அப்துல்லாஹ் தடுப்பு உத்தரவு நீடிப்பதற்கான அனுமதியை வழங்கினார்..

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின்  தலைவரான பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் ஏற்கனவே தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பாக குற்றப்புலனாய்வு துறையினரால் கைதாகி  தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.