மட்டக்களப்பில் இருவேறு பகுதிகளில் பாரிய கொள்ளைச்சம்பவங்கள்

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் மற்றும் வவுணதீவு ஆகிய பகுதிகளில் இரண்டு கொள்ளைச்சம்பவங்கள் இன்று செவ்வாய்க்கிழமை பதிவாகியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட குற்றத்தடயவியல் பிரிவு பொறுப்பதிகாரி கே.ரவிச்சந்திரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு,ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தளவாய் பகுதியில் நேற்று திங்கட்கிழமை இரவு மூன்று பேர் பொல்லு தடிகளுடன் சென்று சட்டத்தரணி ஒருவரை தாக்கிவிட்டு அவரின் மனையின் தாலிக்கொடியை அபகரித்துச்சென்றுள்ளனர்.

வீட்டிக்கு வந்த மூன்று பேர் வெளியில் ஒளிர்ந்த மின் குமிழை அணைத்துவிட்டு இந்த கொள்ளையில் ஈடுபட்டுள்ளதாக கே.ரவிச்சந்திரன் தெரிவித்தார்.

இதன்போது சுமார் நான்கரைப்பவுண் தாலிக்கொடி அபகரித்துச்செல்லப்பட்டுள்ளதாகவும் கொள்ளையர்களின் பல தடயப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரவெட்டிப்பகுதியில் மூடியிருந்த  வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த நான்கு கையடக்க தொலைபேசிகள்,மூன்று பவுண் தங்க நகைகள்,பத்தாயிரம் ரூபா பணம் என்பன கொள்ளையிட்டுச்செல்லப்பட்டுள்ளதாகவும் மட்டக்களப்பு மாவட்ட குற்றத்தடயவியல் பிரிவு பொறுப்பதிகாரி கே.ரவிச்சந்திரன் தெரிவித்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை குறித்த வீட்டின் உரிமையாளர் வீட்டினை பூட்டிவிட்டு உறவினர்கள் வீட்டுக்கு சென்றுவிட்டு நேற்று திங்கட்கிழமை மாலை வீட்டுக்கு வந்து பார்த்தபோது கொள்ளையிடப்பட்டிருந்ததாக இன்று செவ்வாய்க்கிழமை வவுணதீவு பொலிஸ் நிலையத்தில் முறையிட்டிருந்ததாகவும் வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.