இந்திய அரசினால் மட்டக்களப்புக்கு ஒதுக்கப்பட்ட நிதி கிழக்கு மாகாணசபையால் முடக்கம் -பிரசன்ன இந்திரகுமார் குற்றச்சாட்டு

மட்டக்களப்பு மாவட்டத்தில் 45 பாடசாலைகளின் கட்டிட வளர்ச்சிக்காக இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட நிதி கிழக்கு மாகாணசபையினால் முடக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாணசபையின் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திகுமார் தெரிவித்தார்.

மட்டக்களப்பு,பட்டிருப்பு வலயத்திற்குட்பட்ட மகிழூர்,கண்ணகிபுரம் விநாயகர் வித்தியாலயத்தில் வெள்ளிக்கிழமை பிற்பகல் இரண்டு மாடிக்கட்டிடத்தை திறந்துவைத்து உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது மேலும் உரையாற்றிய அவர்,

கடந்த கால யுத்ததினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளுக்கு எனக்கூறி மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 45பாடசாலைகளுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் கோரிக்கைக்கு அமைவாக ஒரு நாட்டினால் ஒதுக்கப்பட்ட நிதி கிழக்கு மாகாணசபையினால் முடக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 45 பாடசாலைகளில் கட்டிட வளர்ச்சிக்காக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் இந்தியாவிடம் விடுத்தவேண்டுகோளின் அடிப்படையில் இந்தியா வாக்குறுதி வழங்கியது.இது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.அது தொடர்பான ஆவணங்கள் என்னிடம் உள்ளது.

இதனை கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் முதல்மூச்சாக கொண்டு நலிவடைந்துள்ள எமது பாடசாலைகளுக்கு குறித்த கட்டிட தேவைகளை பூர்த்திசெய்ய நடவடிக்கையெடுக்கவேண்டும்.

பாடசாலைகளில் கட்டிடங்களை அமைக்கும்போது அவை இயற்கைக்கு எதிரான பகுதியில் அமைக்கப்படாமல் இயற்கைக்கு இசைவானதாக அமைக்கப்படவேண்டும்.

கடந்த காலத்தில் எமது யுத்தத்தினை காரணம் காட்டி எமது கல்வி சீரழிந்துவிட்டது என குறைகூறிக்கொண்டிருப்பதில் எந்தவித அர்த்தமும் இல்லை.எமது சிறுவர்களை கல்வியிலாளர்களாக வளர்க்கவேண்டிய பொறுப்பு பெற்றோருக்கு உள்ளது, ஆசிரியர்,அதிபர்,சமூக நலன் விரும்பிகளுக்கு உள்ளது.

இன்று கிழக்கு மாகாணத்தில் பாடசாலை மாணவர்களின் இடைவிலகலை பார்க்கும்போது முஸ்லிம் மாணவர்களை விட தமிழ் மாணவர்களே அதிகளவில் உள்ளனர்.அதனால் எங்களுக்கு வரும் வளங்கள் குறைந்துகொண்டே செல்லும் நிலையேற்படும்.