மட்டக்களப்பில் நீதிமன்ற கட்டிட தொகுதி திறந்துவைப்பு –ஜனாதிபதி வராததால் நீதிபதிகள் திறந்துவைத்தனர்

கிழக்கு மாகாணத்தின் முதல் நீதிமன்ற கட்டிடம் அமைக்கப்பட்ட மாவட்டமாக கருதப்படும் மட்டக்களப்பு மாவட்டத்தில் சகல வசதிகளும் கொண்ட நீதிமன்ற கட்டிட தொகுதி மற்றும் நவீன வசதிகள் கொண்ட கேட்போர் கூடம் என்பன திறந்துவைக்கப்பட்டது.

நேற்று மாலை மட்டக்களப்பு மாவட்ட சட்டத்தரணிகள் சங்க தலைவர் வி.வினோபா இந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மேல் நீதிமன்ற நீதிபதி திருமதி சந்திராணி விஸ்வலிங்கம் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

விசேட அதிதிகளாக கல்முனை சிவில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதி ரத்ன மாரசிங்க,மட்டக்களப்பு மாவட்ட நீதிபதி ரி.எல்.மனாப்,மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம்.என்.அப்துல்லா,களுவாஞ்சிகுடி மற்றும் ஏறாவூர் நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம்.றியாழ்,வாழைச்சேனை நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.றிஸ்வி ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில் சிறப்பு அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் அலிசாகிர் மௌலானா,மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம்.உதயகுமார் மற்றும் மதுவரித்திணைக்கள அத்தியட்சர்,சிறைச்சாலை அத்தியட்சர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இன்று ஜனாதிபதியினால் குறித்த நீதிமன்ற தொகுதி திறந்துவைக்கப்படவிருந்த நிலையில் வடகிழக்கில் இடம்பெற்றுவரும் ஹர்த்தாலை தொடர்ந்து அவரது பயணம் இடைநிறுத்தப்பட்டது.

இந்த நிலையில் நீதிமன்ற கட்டிட தொகுதியை திறந்துவைத்ததை தொடர்ந்து புதிதாக திறந்துவைக்கப்பட்ட நவீன கேட்போர் கூடத்தில் நிகழ்வுகள் நடைபெற்றன.

இதன்போது மட்டக்களப்பு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தினால் தயாரிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்பான நூலும் இதன்போது வெளியிட்டுவைக்கப்பட்டன.

நீதியமைச்சின் 140மில்லியன் ரூபா நிதியொதுக்கீட்டின் கீழ் இந்த கட்டிடம் அமைக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டதாக மட்டக்களப்பு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளர் கண்ணன் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் மமட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் உள்ள சட்டத்தரணிகள் சங்க உறுப்பினர்கள்,சட்டத்தரணிகள்,நீதிமன்ற ஊழியர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.