ஈழத்தின் தனிப்பெரும் இலக்கியவாதி புலவர்மணி ஏ.பெரியதம்பிப்பிள்ளையின் 37வது நினைவு தின நிகழ்வு

ஈழத்தமிழர்களின் வரலாற்றில் தனக்கென தனியிடத்தினைக்கொண்ட பிரபல எழுத்தாளரும் கவிஞருமான இலக்கிய கலாநிதி புலவர்மணி ஏ.பெரியதம்பிப்பிள்ளையின் 37வது நினைவு தினமும் புலவர்மணியின் உள்ளமும் நல்லதும் நூல் வெளியீடும் சனிக்கிழமை (07)காலை மட்டக்களப்பு,குருக்கள்மடத்தில் நடைபெற்றது.


சர்வதேச ரீதியில் தமிழ் மொழியின் பெருமையினை எடுத்துச்சென்ற காரணத்தினால் புலவர்மணி ஏ.பெரியதம்பிப்பிள்ளையின் வாழ்க்கை வரலாறுகள் இலங்கையின் கல்வி பாடப்பரப்பிற்குள்ளும் எதிர்வரும் ஆண்டில் உட்புகுத்தப்படுத்தப்பட்டுள்ளது.

மண்டூரை பிறப்பிடமாகவும் குருக்கள்மடத்தினை வசிப்பிடமாகவும் கொண்ட புலவர்மணி ஆரம்பக்கல்வியை மண்டூரிலும் கல்முனை வெஸ்லிக்கல்லூரியிலும் பின்னர் யாழ்ப்பாணத்திலும் தொடர்ந்தார்.

தமிழ் ஆசானாக பல்வேறு அர்ப்பணிப்புமிக்க சேவையினையாற்றிய அவர் பல கல்விமான்கள் உருவாக்கத்திற்கும் காரணமாகவிருந்தார்.

இத்தனை பெருமைகள் கொண்ட புலவர் மணியின் நினைவு தினம் குருக்கள்மடம் கலைவாணி மகா வித்தியாலயத்தில் புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை நினைவுமன்றத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை நினைவுமன்றத்தின் தலைவர் கலாநிதி சி.சந்திரசேகரம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் யாழ் பல்கலைக்கழகத்தின் தமிழ் மொழித்துறை ஓய்வுநிலை பேராசிரியர் எஸ்.சிவலிங்கம்,மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் மு.கோபாலரட்னம் ஆகியோர் பிரதம அதிதியாக கலந்துகொண்டனர்.

ஆரம்ப நிகழ்வாக முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர் மற்றும் இலக்கிய கலாநிதி புலவர்மணி ஏ.பெரியதம்பிப்பிள்ளை ஆகியோரின் உருவப்படத்துக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு வணக்கம் செலுத்தப்பட்டது.

இரு நிகழ்வுகளாக நடைபெற்ற இந்த நிகழ்வின் ஆரம்பத்தில் இலக்கிய கலாநிதி புலவர்மணி ஏ.பெரியதம்பிப்பிள்ளையின் 37வது நினைவு தினத்தினை குறிக்கும் வகையில் நினைவுப்பேருரை நடைபெற்றது.

இந்த நினைவுப்பேருரையினை “தமிழ் சூழலில் தொன்மங்களும் காப்பிய மரபுகளும்:புத்தாக்கம் பெறுதல்” என்னும் தலைப்பில் யாழ் பல்கலைக்கழகத்தின் தமிழ் மொழித்துறை ஓய்வுநிலை பேராசிரியர் எஸ்.சிவலிங்கம் நிகழ்த்தினார்.

அதனைத்தொடர்ந்து பிரதம அதிதிகளினால் புலவர்மணியின் ‘உள்ளமும் நல்லதும்’நூல் வெளியிட்டு வைக்கப்பட்டது.

நூல் வெளியீட்டை தொடர்ந்து நூல் அறிமுகவுரையினை கிழக்கு பல்கலைக்கழக தமிழ் மொழித்துறை தலைவர் திருமதி ரூபி வலன்ரினா பிரான்சிஸ் நிகழ்த்தினார்.

புலவர் மணி மறைந்தாலும் அவரினால் தமிழ் சமூகத்திற்கு வழங்கப்பட்டுள்ள அருங்கொடைகள் இந்த உலகமும் தமிழர்களும் உள்ளவரையில் நினைவுகூரப்படும் என இங்கு கருத்துகள் முன்வைக்கப்பட்டன.