2015 உடனடி விளம்பரதாரர்” போட்டியில் கிழக்குப் பல்கலைக்கழக சந்தைப்படுத்தல் முகாமைத்துவ பீட மாணவர்கள் சாதனை

இலங்கையிலுள்ள பல்கலைக்கழக மாணவர்களுக்கிடையில் நடத்தப்பட்ட “2015 உடனடி விளம்பரதாரர் - IMMINENT MARKETER   போட்டியில் கிழக்குப் பல்கலைக்கழக சந்தைப்படுத்தல் முகாமைத்துவ பீட மாணவர்கள் சாதனை நிலைநாட்டியுள்ளதாக கிழக்குப்பல்கலைக்கழக வர்த்தக முகாமைத்துவப் பீட சந்தைப்படுத்தல் முகாமைத்துவ சிறப்புக் கற்கைநெறி சிரேஷ்ட விரிவுரையாளர் அன்ரனி அன்ரூவ் தெரிவித்தார்.


சந்தைப்படுத்தல் தொடர்பான நிகழ்கால உலகின் செயற்பாடு மற்றும் கோட்பாட்டு அறிவினை மேம்படுத்தும் வகையில் இந்நிகழ்வு செவ்வாய்க்கிழமை தெஹிவளை கொன்கோர்ட் கிரான்ட் ஹோட்டலில் இடம்பெற்றது.

ஸ்ரீஜயவர்தன பல்கலைக்கழக சந்தைப்படுத்தல் நிருவாகக் குழுவின் ஒழுங்கமைப்பில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிழக்குப் பல்கலைக்கழக சந்தைப்படுத்தல் முகாமைத்துவ பீட இறுதியாண்டு மாணவர்களான ஜெ. சரண்யா, என். ஷாமினி, பி. பிரசாத், ஏ. மைக்கல்  நிரோஷன், எஸ்.எம். அப்துல் மலிக், பி. பார்த்தீபன் ஆகியோர் இப்போட்டியில் கலந்து கொண்டு தமது திறமைகளை சிறந்த முறையில் வெளிக்காட்டி சாதனை படைத்துள்ளனர்.

பம்பலப்பிட்டி செலான் வங்கி முகாமையாளர் டபிள்யூ.எஸ்.எல். சுபுன் பெரேரா சாதனை படைத்த மாணவர்களுக்கு விருதுகளை வழங்கினார்.