தமிழ் அரசியல் கைதிகளுக்கு சார்பாக நடாத்தப்படும் போராட்டத்துக்கு ஆதரவு வழங்கவும் -ஜனா

சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலைசெய்யக்கோரி நாளை வியாழக்கிழமை நடைபெறவுள்ள கவன ஈர்ப்பு போராட்டம் மற்றும் நாளை வெள்ளிக்கிழமை நடைபெறும் பூரண ஹர்த்தல் போராட்டம் என்பவற்று தமிழ் மக்கள் அனைவரும் பூரண ஒத்துழைப்பினை வழங்கவேண்டும் என கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


இது தொடர்பில் அவர் இன்று புதன்கிழமை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கையில் உள்ள சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் அண்மைக்காலமாக அரசாங்கத்திடம் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு அவை எதுவும் நடைபெறாத நிலையே இருந்துவருகின்றது.

இந்த நிலையில் சிறைச்சாலையில் உள்ள எமது தமிழ் உறவுகள் தொடர்ச்சியான உண்ணாவிரத போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர்.

2009ஆம் ஆண்டுக்கு பின்னர் 12ஆயிரம் போராளிகள் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலைசெய்யப்பட்டுள்ள நிலையில் யுத்த நடவடிக்கைகளில் நேரடியாக பங்குபற்றாதவர்கள் இன்னும் சிறைச்சாலைகள் அடைக்கப்பட்டுள்ளமை வேதனைக்குரிய விடயமாகவே நோக்கப்படவேண்டும்.

சிறைச்சாலையில் சுமார் 270க்கும் மேற்பட்ட அரசியல் கைதிகள் உள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.இவர்களுக்கு புனர்வாழ்வழித்தாவது விடுதலைசெய்யுங்கள் என நாங்;கள் கோரிவருகின்றோம்.ஆனால் இதற்கான சரியான பதிலை இதுவரையில் அரசாங்கம் வழங்காத நிலையே இருந்துவருகின்றது.

இந்த நிலையில் இந்த சிறைக்கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வடகிழக்கில் பல்வேறு போராட்டங்களை தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னெடுத்துவருகின்றது.

இதன் ஒரு கட்டமாக நாளை வியாழக்கிழமை மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்றை மிகவும் அமைதியான முறையில் முன்னெடுப்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு தயாராகிவருகின்றது.

அத்துடன் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை சாத்வீக போராட்டத்தின் ஒரு கட்டமாக ஹர்த்தால் அனுஸ்டிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்தவேளையில் எமது சிறையில் அடைக்கப்பட்டுள்ள உறவுகள் விடுதலையாகி தமது குடும்பத்துடன் சந்தோசமாக வாழும் வரைக்கும் இந்த போராட்;டத்தினை முன்னெடுப்பதற்கு தமிழ் மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு பலமாக இருக்கவேண்டும்.

அதன் ஒரு கட்டமாக நாளை நடைபெறவுள்ள கவன ஈர்ப்பு போராட்டத்தில்இனமத பேதங்கங்கள்,கட்சி அரசியலுக்கு அப்பால் அனைவரையும் ஒன்று சேருமாறு அழைப்பதுடன் நாளை மறுதினம் நடைபெறவுள்ள பூரண ஹர்த்தாலுக்கும் தமது ஒத்துழைப்பினை வழங்குமாறும் கேட்டுக்கொள்கின்றேன்.