வாழைச்சேனையில் 20 நாளான ஆண் சிசுவை விற்பனை செய்ய முயன்றவர்களுக்கு பிணை

மட்டக்களப்பு,வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவிலுள்ள நாவலடிப் பிரதேசத்தில், பிறந்து 20 நாட்களேயான ஆண் சிசுவை, விற்பனை செய்ய முயன்ற குற்றச்சாட்டில் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்ட இரண்டு பெண்கள் ஆண் ஒருவர் உட்பட மூவரையும் தலா ஒரு இலட்ச ரூபாய் சரீரப் பிணையில் செல்லுமாறு வாழைச்சேனை மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஏ.எல்.எம். முனாஸ் உத்தரவிட்டார்.


119 அவசர இரகசிய தகவவல் வழங்கும் தொலைபேசி அழைப்பினூடாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, வாழைச்சேனை பொலிஸாரால் சந்தேக நபர்கள் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டிருந்தனர்.

சிசுவின் தாய், சிசுவை வாங்க முற்பட்ட பெண் மற்றும் தரகர் ஆகிய மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டு தலா ஒரு இலட்ச ரூபாய் சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக பிரதேசத்திற்குப் பொறுப்பான சிறுவர் நன்னடத்தை உத்தியொகத்தர் எம்.எம். நஜிமுதீன் தெரிவித்தார்.

எதிர்வரும் திங்கட்கிழமை அடுத்த வழக்குத் தவணைக்கு தேதி குறிக்கப்பட்டுள்தாகவும் அன்றைய தினம் சந்தேக நபர்கள் ஆஜராக வேண்டும் என்ற உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலையைச் சேர்ந்த தாயொருவரே குறித்த சிசுவை வாழைச்சேனை நாவலடியைச் சேர்ந்த பிள்ளைப் பேறற்ற ஒருவருக்கு வழங்கிச் சென்றுள்ளார்.