காத்தான்குடியில் குண்டுவெடிப்பு –ஒருவர் படுகாயம்

மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள கர்பலா நகர் கிராமத்தில் குப்பைக்குள் கிடந்த குண்டொன்று வெடித்ததில் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக காத்தான்குடிப் பொலிஸார் தெரிவித்தனர்.

திங்கள் நண்பகல் இடம்பெற்ற இச்சம்பவம் பற்றித் தெரியவருவதாவது, வளவொன்றினுள் குப்பைக்குத் தீவைக்கும் போது குண்டு வெடித்துள்ளது.

இந்நிலையில் வழமையாக சம்பவ இடத்தில் வீட்டு வளவைத் துப்பரவு செய்து குப்பைகளுக்குத் தீவைப்பதில் ஈடுபட்டிருந்த ஹயாத்து முஹம்மது இர்ஷாத் (வயது 34) என்பர் குண்டு வெடித்ததில் படுகாயமடைந்து காத்தான்குடி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.

சம்பவம் பற்றி காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.