வடகிழக்கு தமிழ் கட்சிகளை திருப்திபடுத்தவே பிள்ளையான் தடுத்துவைப்பு –ரி.எம்.வி.பி.செயலாளர் பிரசாந்தன்

வடக்கு கிழக்கில் இருக்கின்ற அரசுக்கு முட்டுக்கொடுக்கும் சிறுசிறு தமிழ் கட்சிகளை திருப்திப்படுத்தவேண்டும் என்பதற்காக மேற்கொள்ளப்படும் கைதுகள் என்ற சந்தேகம் உள்ளதாக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் செயலாளர் பூ.பிரசாந்தன் தெரிவித்தார்.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் குற்றப்புலனாய்வுத்துறையினரால் தடுத்துவைக்கப்பட்டுள்ளது தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது.

ளதாக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் செயலாளர் பூ.பிரசாந்தன் , கட்சியின் பிரதித்தலைவர் யோகவேள்,மகளிர் அணித்தலைவி திருமதி செல்வி மனோகர்,பொருளாளர் தேவராஜன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் குற்றப்புலனாய்வுத்துறையினரால் தடுத்துவைக்கப்பட்டுள்ளது தொடர்பில் பல்வேறுபட்ட வகையில் ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுவருகின்றன.

இந்த கைதானது அரசியல் ரீதியான கைதாகவே நாங்கள் பார்க்கின்றோம்.குற்றப்புலனாய்வுத்துறையினர் எந்தவித அழைப்பும் வழங்காமல் நேற்று முன்தினம் இரவு வாழைச்சேனையில் உள்ள எமது தலைவரின் சகோதரியின் வீட்டிற்கு சென்ற குற்றப்புலனாய்வுதுறையினர் என தங்களை அடையாளப்படுத்தியவர்கள் சந்திரகாந்தனை அழைத்துச்செல்லவேண்டும் என குறிப்பிட்டிருந்தார்கள்.

அந்தவேளையில் அவர் அங்கிருக்கவில்லை.அது தொடர்பில் அறியும்பொறுட்டு அவர் நேரடியாக கொழும்பில் உள்ள குற்றப்புலனாய்வுத்திணைக்களத்துக்கு சென்றிருந்தார்.விசாரணைக்காக சென்ற அவர் அங்கு தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.

ஆனால் கைதுசெய்யப்பட்டார்,சரணடைந்தார் என்றவாறு செய்திகள் வெளியிடப்படுகின்றன.அவர் கைதுசெய்யப்படவில்லை.நேரடியாக சென்று விசாரணையில் பங்குகொண்டார்.அவர் கைதுசெய்யப்பட்டவில்லை.மேலதிக விசாரணைக்காக தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.

ஜோசப்பரராஜசிங்கத்தின் கொலையாக இருக்கட்டும் ரவிராஜின் கொலையாக இருக்கட்டும் குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும் என்பதில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி உறுதியாகவுள்ளது.

அதன்பால்தான் ஜனநாயக ரீதியாக வந்ததன் பின்னர் கிழக்கு மாகாணசபையில் சீரான ஆட்சியை நடாத்திக்காட்டியுள்ளதுடன் அபிவிருத்தி பணி உட்பட மனிதாபிமான பணியையும் செய்துகாட்டியது.அதுமட்டுமன்றி சிங்களவர்கள்,தமிழர்கள்,முஸ்லிகளை கிழக்கு மாகாணத்தில் ஒன்றாக வாழும் நிலையை ஏற்படுத்திய கட்சியாகவும் எமது தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள்; கட்சியுள்ளது.

எமது கட்சிக்கு சேறு பூசவேண்டும்.எமக்குள்ள மக்களின் மனங்களில் மாற்றங்களை ஏற்படுத்தவேண்டும்.எமது கட்சிக்கு உள்ள வாக்கு வங்கியை இல்லாமல் செய்யவேண்டும் என்பதற்காக மேற்கொள்ளப்படும் அரசியல் செயற்பாடா இருந்தால் அதுவெற்றியளிக்கப்போவதில்லை.

எமது கட்சியின் தலைவர் எந்தவித குற்றமும் இழைக்காதவர்.குற்றப்புலனாய்வுத்துறையினரின் விசாரணையின் பின்னர் ஒரு நிரபராதியாக வெளிவரவுள்ளார்.அப்போது அவர் மீது குற்றம்சாட்டி கைகளை நீட்டியவர்கள் எல்லாம் வாயடைத்து நிற்பார்கள் என்பது எமது கட்சியின் உறுதியாக நிலைப்பாடாகும்.

நல்லாட்சிக்கான அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் நிலைப்பாட்டில் இருக்குமானால் ஜோசப்பரராஜசிங்கம் மற்றும் ரவிராஜுடன் கொலைகள் நிறுத்தப்படவில்லை.பல கொலைகள் இடம்பெற்றுள்ளது.பல பாராளுமன்ற உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

1997ஆம் ஆண்டு தங்கத்துரை அவர்கள் படுகொலைசெய்யப்பட்டார்.அந்த விசாரணை இன்னும் முற்றுப்பெறவில்லை.கிங்ஸ்லி இராசநாயகம் அவர்களும் கொல்லப்பட்டார்.அதேபோன்ற நிமலன் சௌந்தநாயகம்,இராஜன் சத்தியமூர்த்தி,ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளராக இருந்தபோது சுந்தரம்பிள்ளை அவர்களும் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த கொலைகள் தொடர்பில் எந்தவிசாரணையும் முற்றுப்பெறால் அப்படியே உள்ளது.

இந்த நிலையில் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களின் கொலை தொடர்பில் குற்றவாளிகளை கைதுசெய்வதாக கூறிக்கொண்டு ஏனைய கொலைகளின் கிடப்பில் போட்டிருப்பதானது அரசியல் ரீதியாக ஒருசாராரை திருப்தி படுத்தவேண்டும் என்பதற்கான நடவடிக்கையாகும்.

குறிப்பாக வடக்கு கிழக்கில் இருக்கின்ற அரசுக்கு முட்டுக்கொடுக்கும் சிறுசிறு தமிழ் கட்சிகளை திருப்திப்படுத்தவேண்டும் என்பதற்காக மேற்கொள்ளப்படும் கைதுகள் என்ற சந்தேகமும் எம்மிடம் உள்ளது.

இருந்தபோதிலும் ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான நல்லாட்சி ஏற்படுத்தப்பட்டுள்ளவேளையில் நீதியான விசாரணைகள் நடைபெறும் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது.
தடுத்துவைக்கப்பட்டுள்ள தலைவருடன் தொடர்புகொள்ளமுடியவில்லை.

எனினும் நாளை(செவ்வாய்க்கிழமை)நீதிமன்றில் அவரை ஆஜர்படுத்தவுள்ளதாக குற்றப்புலனாய்வுத்துறையின் பணிப்பாளர் நாயகம் எங்களிடம் தெரியப்படுத்தினார்.