பெரியகல்லாறு உதயபுரம் ஸ்ரீவடபத்திரகாளியம்மன் ஆலய சக்தி விழா ஆரம்பம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரசித்திபெற்ற பெரியகல்லாறு உதயபுரம் அருள்மிகு ஸ்ரீவடபத்திரகாளியம்மன் ஆலயத்தின் வருடாந்த சக்தி விழா இன்று வியாழக்கிழமை கதவு திறத்தலுடன் ஆரம்பமானது.

இந்துமகா சமுத்திரமும் மட்டக்களப்பு வாவியும் சங்கமிக்கும் எழில் கொஞ்சும் இடத்தில் அருள்பாலித்துவரும் பெரியகல்லாறு உதயபுரம் அருள்மிகு ஸ்ரீவடபத்திரகாளியம்மன் ஆலயமானது பெரும் அற்புதங்களும் அதிசயங்களும் நிறைந்த ஆலயமாக கருதப்படுகின்றது.

இந்த ஆலயத்தின் வருடாந்த சக்தி விழாவின் ஆரம்ப நிகழ்வாக பெரியகல்லாறு ஸ்ரீசிவசுப்ரமணிய ஆலயத்தில் இருந்து அம்பாள் எழுந்தருளச்செய்யும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.

பெருமளவான அடியார்கள் கற்பூரச்சட்டி ஏந்திவர ஸ்ரீமுருகன் அறநெறிப்பாடசாலை மாணவர்களின் நடன நிகழ்வுகளுடன் இந்த அம்பாள் எழுந்தருளல் செய்யும் நிகழ்வு நடைபெற்றது.

இதன்போது ஆலயத்திற்கு அம்பாள் கொண்டுவரப்பட்டதை தொடர்ந்து விசேட பூஜைகள் நடைபெற்று திருக்கதவு திறக்கும் நிகழ்வு நடைபெற்றது.

ஏழு தினங்கள் நடைபெறும் ஆலயத்தின் வருடாந்த சக்தி விழாவில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.00மணியளவில் பெரியகல்லாறு ஸ்ரீசிவசுப்ரமணிய ஆலயத்தில் இருந்து வாழைக்காய் எழுந்தருளல் செய்யும் நிகழ்வு நடைபெறும்.

அதனைத்தொடர்ந்து திங்கட்கிழமை மாலை அம்பாளின் ஊhகாவல் திரு உலா நடைபெறவுள்ளதுடன் செவ்வாய்க்கிழமை காலை சக்தி மகா யாகமும் அன்று பிற்பகல் நோற்பு கட்டும் நிகழ்வும் அன்று மாலை கடற்குளிப்பு நிகழ்வும் நடைபெறவுள்ளது.

மறுதினம் புதன்கிழமை அன்னையின் மிகவும் அற்புதம் வாய்ந்த தீமதிப்பு உற்சவம் நடைபெறவுள்ளதுடன் அதனைத்தொடர்ந்து சம்பூரண பூஜையும் நடைபெறவுள்ளது.