மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் ஆசிரியர் தின நிகழ்வு

இலங்கையின் முதலாவது பாடசாலை என்ற பெருமையினைக்கொண்ட மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் ஆசிரியர் தின நிகழ்வு இன்று சிறப்பாக நடைபெற்றது.

பாடசாலையின் அதிபர் பி.விமல்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் எஸ்.தண்டாயுதபாணி பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

சிறப்பு அதிதியாக கிழக்கு மாகாணசபையின் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார்,கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரம்,இரா.துரைரெட்னம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு வலய கல்வி அலுவலகத்தின் பிரதிக்கல்விப்பணிப்பாளர் சசிந்திர சிவகுமார்,மண்முனை வடக்கு கோட்டக்கல்வி பணிப்பாளர் ரி.சுகமாரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது அதிதிகள்,ஆசிரியர்கள் மாணவர்களினால் மாலை அணிவிக்கப்பட்டு ஊhவலமாக அழைத்துவரப்பட்டதுடன் நிகழ்வுகள் ஆரம்பமானது.

இதன்போது சமூகத்தின் வளர்ச்சிக்காக அர்ப்பணிப்புமிக்க சேவையினை ஆற்றிவரும் ஆசிரியர்கள் அதிதிகளினால் கௌரவிக்கப்பட்டனர்.

அத்துடன் இதன்போது ஆசிரியர்களின் பல்வேறு கலை நிகழ்வுகள் நடைபெற்றதுடன் அந்த நிகழ்வுகள் பார்வையாளர்களாக இருந்த மாணவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.