கிழக்கு மாகாண சுகாதார அமைச்சராக முன்னாள் அமைச்சர் உதுமான்லெப்பையை நியமிக்க ஆளுனருக்கு ஜனாதிபதி பணிப்பு

(எம். நவாஸ் )

கடந்த மூன்று மாதங்களாக வெற்றிடமாக காணப்படும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கிழக்கு மாகாண ஆளுனர் ஒஸ்றின் பெனான்டோவை பணித்துள்ளார் .

அண்மையில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சித்தலைவர்களுக்கிடையிலான கூட்டம் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற போதே ஜனாதிபதி மேற்படி பணிப்புரையை ஆளுனருக்கு விடுத்துள்ளார்.

கிழக்கு மாகாண சபையில் 12 உறுப்பினர்களை கொண்டுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு சுகாதார அமைச்சை வழங்குவதற்கான தகைமைகள் இருப்பதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சித்தலைவர்கள் ஜனாதிபதியிடம் எடுத்துக்கூறினர்.   கிழக்கு மாகாண சபையில்  பதினொரு உறுப்பினர்களை கொண்டுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு இரண்டு அமைச்சு பதவிகளும் பிரதி சபாநாயகர் பதவியும் வழங்கப்பட்டடுள்ளது.

அதேபோன்று ஏழு உறுப்பினர்களை கொண்டுள்ள முஸ்லிம் காங்கிரஸிற்கு கிழக்கு மகாண முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளதோடு ஐக்கிய தேசிய கட்சிக்கு சபாநாயகர் பதவியும் வழங்கப்பட்டுள்ளமை பற்றி ஜனாதிபதியிடம் எடுத்துக்கூறி கிழக்கு மாகாண சுகாதார அமைச்சை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும் தேசிய காங்கிரஸிற்கு வழங்குமாறு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சித்தலைவர்கள் ஜனாதிபதியிடம் வேண்டுகொள் விடுத்தனர்.  

இதற்கமைவாக முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சராக இருந்த எம்.எஸ் உதுமான்லெப்பையை சுகாதார அமைச்சராக நியமிக்குமாறு ஆளுனரை ஜனாதிபதி பணித்துள்ளார். மிக விரைவில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சராக முன்னாள் மாகாண அமைச்சர் உதுமான்லெப்பை நியமிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.