இந்தியா தனது கரிசனையை வடக்குக்கு மட்டும் காட்டாது கிழக்குக்கும் காட்டவேண்டும் -ஜனா கடிதம்

இந்திய அரசு இலங்கை தமிழர் தாயகம் தொடர்பான தனது கரிசனையினை வடக்கிற்கு மாத்திரம் மட்டுப்படுத்தாது கிழக்கிற்கும் விஸ்தரிக்கவேண்டும். இது இந்தியாவினது தார்மீகப் பொறுப்பு என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.


இது தொடர்பில் இன்று புதன்கிழமை இந்திய உயர்ஸ்தானிகருக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

அண்மையில் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இந்திய துணைத் தூதரகத்தினால்
ஏற்பாடு செய்யப்பட்ட வைபவம் ஒன்றில் உரையாற்றிய இந்தியத் துணைத் தூதுவர்
ஆ.நட்ராஜன் அவர்களது உரையில் வடக்கு மக்களின் தேவைகளைப் ப+ர்த்தி
செய்வது தமது கடமை என்றவகையில் தெரிவித்துள்ள கருத்தினை வெகுசன ஊடகங்கள் ஊடாக கண்ணுற்றபோது மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையிலும், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் என்ற வகையிலும், எல்லாவற்றிற்கும் மேலாக முன்னாள் விடுதலைப் போராளி என்ற வகையிலும் பல அதிர்வலைகளை என்னுள் ஏற்படுத்தியுள்ளது.

வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் தாயகத்தில் அரசியல் விடுதலை உணர்வு எம் இளைஞர்களிடையே கூர்மையடைந்து அது ஆயுதப் போராட்டமாக பரிணமித்தவேளை அதற்கு ஒரு பின்தளமாக இருந்து எம்மை ஊக்குவித்தது இந்தியாவே ஆகும். தொப்புள்கொடி உறவான எமக்கு நிலையான அரசியல் தீர்வுக்கு இந்தியா தன்னாலான பங்களிப்பை வழங்கும் என்ற நம்பிக்கையின் உற்சாகத்தில் ஆயுதம் ஏந்தினோமோ அதே நம்பிக்கையில் தான் 1987ம் ஆண்டு இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்திய அரசின் கோரிக்கைக்கு ஏற்ப தூக்கிய ஆயுதங்களை கைவிட்டோம்.

அதன்பின் நடைபெற்றவை எல்லாம் எம்நம்பிக்கைக்கு எதிரானதே. அந்தவகையில் இன்னும் கூட இந்தியாவுக்கு எமது இனப்பிரச்சினை தீர்வுவிடயத்தில் ஒரு காத்திரமானபங்கிணை வகிக்கும் தட்டிக்கழிக்க முடியாத தார்மீக பொறுப்பு உண்டு. இதனை இந்தியா மறுக்க முடியாது என்பதே எமது மக்களின் அபிப்பிராயம். இதனால்தான் கடந்த மூன்று தசாப்த யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடகிழக்கு தாயகத்தின் புணர்நிர்மானப்பணிகளில் முக்கிய பங்கை வகிக்க இந்தியா முன்னிற்க வேண்டுமென்று எம்மக்கள் எதிர்பார்க்கின்றார்கள்.

இந்தவகையில் வவுனியா, யாழ்ப்பாணம் புகையிரதப்பாதை நிர்மானம், வடக்கின் வீட்டுத்திட்டம், அச்சுவேலி கைத்தொழில்பேட்டை போன்ற செயற்பாடுகள் இந்தியாவின் தார்மீக கடமையின்பாற் பட்டதாகவே நான் கருதுகின்றேன். அதேபோல யுத்தத்தால் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாணம் தொடர்பாகவும் இந்தியா தனது பார்வையைச் செலுத்த வேண்டியதும் காலத்தின் கட்டாயமே. கடந்த மூன்று தசாப்த யுத்தம் வடக்கினை எந்தளவு பாதித்ததோ அந்தளவு கிழக்குவாழ் தமிழ் பிரதேசங்களை பாதித்தது.

உயிரிழப்புக்கள், உடைமை இழப்புக்கள், காணாமல்போனோர்கள், துணைவரைஇழந்தவர்கள், பிள்ளைகளை இழந்தவர்கள், பெற்றோரைஇழந்தவர்கள் ஆயுதப்படைகளின் அடாவடிக்கு முகம் கொடுத்தவர்கள் என்று கிழக்குமாகாணம்  பட்டகஸ்டம் சொல்லும் தரமல்ல இத்தனைக்கும் மூவின மக்களும் ஏறக்குறைய சமமாக வாழ்வதும்கூட எமக்கு பாதிப்பிணையே ஏற்படுத்தியுள்ளது. ஒருபுறம் பேரினவாத அரசின் பாராமுகம் மறுபுறம் சிறுபான்மை இனமொன்றின் அரசியல் அதிகாரப்பலம் இடையில் மத்தளம் போன்ற தமிழர் நிலை இதுவே கிழக்கு வாழ் தமிழர்களின் யதார்த்தம்.
இந்திய அரசானது வடக்கில் ஒரு துணைத்தூதரகம் அமைத்து பாதிக்கப்பட்டவர்கள் துயர் துடைப்பது போல எதிர்காலத்தில் கிழக்கில் ஒரு துணைத்தூதரகம் அமைத்து கிழக்குமக்கள் தொடர்பாகவும் கவனம் எடுக்க வேண்டும் என்பதே எம்மக்கள் எதிர்பாhப்பாகும்.

உண்மையில்  கிழக்குமாகாணத்தின் முஸ்லிம் பிரதேசங்களின் உட்கட்டமைப்பும் மறுசீரமைப்பும் மத்திய கிழக்கு நாடுகளின் அரசுகளது அனுசரணையுடன் மிகவேகமாக நடைபெற, மறுபுறம் பெரும்பான்மை மக்கள் வாழும் பிரதேசம் அரச நடவடிக்கைகளால் அபிவிருத்திபெற தமிழ்ப் பிரதேசங்கள் அபிவிருத்தியிலோ, உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதிலோ, அல்லது எம்மக்களது வாழ்வாதார மேம்பாட்டிலோ தேசியமட்டத்தைவிட பின்தங்கிய நிலையிலேயே உள்ளது. இந்த பின்னனியிலேயே நான் இந்திய துணைத்தூதுவர் அவர்களது உரையினை நோக்ககின்றேன்.

எனவே இந்திய அரசு இலங்கை தமிழர் தாயகம் தொடர்பான தனது கரிசனையினை வடக்கிற்கு மாத்திரம் மட்டுப்படுத்தாது கிழக்கிற்கும் விஸ்தரிக்கவேண்டும். இது இந்தியாவினது தார்மீகப் பொறுப்பு என்பதுவே எனதும் எமது மக்களதும் கோரிக்கையும் எண்ணமுமாகும்.