குளவித்தாக்குதலில் உயிரிழந்த மாணவியின் இறுதிக்கிரியை இன்று

பாடசாலைசெல்லும் தமது பிள்ளைகள் சாதனைகளுடன் வீடு திரும்புவார்கள் என்றே பெற்றோர்கள் கனவு காண்கின்றனர்.


ஆனால் பாடசாலை செல்லும் தமது பிள்ளைகள் உயிரிழந்த நிலையில் சடலமாக வீடு திரும்பும்போது பெற்றோரின் கனவு சுக்குநூறாக்கப்படுவதுடன் அவர்களை வேதனையிலும் ஆழ்த்துகின்றது.

அவ்வாறான ஒரு சம்பவம் நேற்று மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குடியிருப்பு பகுதியிலும் இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு- குடியிருப்பு  கலைமகள் வித்தியாலயத்தில் உயர்தரத்தில் கற்கும் மாணவியொருவர் குழவிக் கொட்டுக்கு இலக்கான நிலையில் உயிரிழந்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

ஏறாவூர் சவுக்கடி கிராமத்தைச் சேர்ந்த த.எனோஜனி (வயது 16) என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்தவராகும்.

புதன்கிழமை பாடசாலை விட்டு வீடு செல்லும் வேளையில் வீதியில்  வைத்து கருங்குழவிகள் கொட்டியுள்ளன.

காயங்களுக்குள்ளாகி மயக்கமடைந்த மாணவி உடனடியாக ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார்.

எனினும், அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைபெற்றுவரும் நிலையில் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை காலை மரணத்தைத் தழுவியுள்ளார்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளதுடன் உயிரிழந்த மாணவியின் சடலம் இன்று பிற்பகல் நல்லடக்கம் செய்யப்பட்டது.