இன ஐக்கியத்திற்கு எடுத்துக்காட்டாக கிழக்கு மாகாணம் திகழ்கின்றது - கல்விப் பணிப்பாளர் நிஸாம் என்.ரீ.ஏ. நிஸாம்

இன ஐக்கியத்திற்கு எடுத்துக்காட்டாக இப்பொழுது கிழக்கு மாகாணாம் திகழ்கின்றது என கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் நிஸாம் என்.ரீ.ஏ. நிஸாம்’ தெரிவித்தார்.


மட்டக்களப்பு மத்தி கல்வி வலய பணிப்பாளர் மற்றும் பாடசாலை அதிபர்களைச் சந்தித்துக் கலந்துரையாடும் நிகழ்வு வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு, ஏறாவூர் அலிகார் தேசியக் கல்லூரியில் இடம்பெற்ற போது அவர் இதனைத் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் சகல கோட்டக் கல்விப் பணிப்பாளர்கள், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், பாடசாலை அதிபர்களும் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து அங்கு உரையாற்றிய கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் நிஸாம் என்.ரீ.ஏ. நிஸாம் தெரிவித்தாவது,

நீண்டகாலமாக பிளவுபட்டு நின்ற தமிழ் முஸ்லிம் இன ஐக்கியம் இப்பொழுது வலுப்பெற ஆரம்பித்திருக்கின்றது.

கடந்த காலத்தில் தொடராக இரண்டு சமூகங்களும் ஒரு சந்தேகக் கண்ணோடு ஒருசாராரை மற்றத் தரப்பார் அவதானித்துப் பழகி வந்த சூழ் நிலை இப்பொழுது மாறிவிட்டிருக்கின்றது.

அத்தகையதொரு அச்சந்தரும் நிலைமை தற்போதைய முதலமைச்சரின் காலத்தில் இல்லாமலாக்கப்பட்டிருக்கிறது என்பது கிழக்கு மாகாண தமிழ் முஸ்லிம் மக்கள் பெற்றுக்கொண்டுள்ள பெரும் பாக்கியம் என்றே நான் கருதுகின்றேன்.
கடந்த காலத்தில் நிருவாக மட்டத்திலும் தமிழ் முஸ்லிம் உறவென்பது மிக அபூர்வமாக நடக்கின்ற ஒன்றாகவே இருந்து வந்திருக்கின்றது.

தமிழ் முஸ்லிம் என்பது மட்டுமல்ல மொழியால் வேறுபட்ட சிங்கள மக்கள் கூட இன ஒற்றுமையுடன் நிருவாகம் செய்யக் கூடிய சூழல் தற்போதைய முதலமைச்சரின் காலத்தில் உருவாக்கப்பட்டிருக்கின்றது.

சகல இன அதிகாரிகள் மட்டுமல்ல அனைத்து அரசியல் வாதிகளும் கூட ஒன்றாக அமர்ந்திருந்து ஒரு பொதுப் பிரச்சினை பற்றி ஆக்கபூர்வமாக விவாதிக்கின்ற சூழ்நிலை கண்டு மனம் மகிழ்ச்சியடைகின்றது. இது ஒரு பெரிய மாற்றமாகும்.
இந்த நிலைமை இனித் தொடர வேண்டும். பிரிந்து வாழ்ந்த கடந்த காலத்திற்குப் போய் நாம் பின்னடைவைச் சந்திக்கக் கூடாது.

கடந்த காலத்தில் இன ஒற்றுமையை ஏற்படுத்த நாங்கள் படாதபாடு பட்டிருக்கின்றோம். எத்தனையோ சமாதானக் கூட்டங்களையும் கருத்தரங்குகளையும் நடத்தியிருக்கின்றோம். ஆனால், தற்சமயம் ஒரு முதலமைச்சரின் நியமனத்தினூடாக இது அடையப் பெற்றிருக்கின்றது என்றால் அது வரலாற்றுச் சாதனை என்றே கொள்ள வேண்டும்.

முதலமைச்சரின் அணுகுமுறையும் உள்ளம் திறந்த செயற்பாடுகளும் இந்தச் சாதனையைப் படைக்க உதவியிருக்கின்றன.

மக்களிடம் உண்மைகள் உறங்காமல் இப்பொழுது ஒற்றுமை தளைத்தோங்குகிறது. இந்த ஒற்றுமையினூடாக கல்வி உட்பட சகல அபிவிருத்திகளும் இயல்பாகவே கிடைத்துவிடும் என்பது எனது பேரவாவாகும்.” என்றார்.