வவுணதீவில் சமூதாய விழிப்புணர்வு கலாச்சார நிகழ்வு

வறுமை, சிறுவர் துஷ்பிரயோகம், பெண்களுக்கெதிரான வன்முறைகள், போதைப் பொருள் பாவினை மற்றும் இன்னோரன்ன சமூகச் சீர்கேடுகளைத் தெளிவுபடுத்தும் சமூதாய விழிப்புணர்வு கலாச்சார நிகழ்வு மட்டக்களப்பு வவுணதீவில் இடம்பெற்றது.


இயற்கை, செயற்கை இடர்களினால் பாதிப்புறும் மக்களின் சமூக மேம்பாட்டிற்காக வவுணதீவுப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கிராமங்கள் தோறும் சமூக விழிப்புணர்வு நிகழ்வுகளைத் தாம் நடத்தி வருவதாகவும் வறுமையைப் போக்குவதற்காகவும் பெண்கள் மத்திய கிழக்கு நாடு செல்வதைக் குறைத்து உள்ளுரிலேயே சுயதொழில்வாய்ப்புக்களை ஏற்படுத்துவதற்காகவும் தமது துர்க்கா மகளிர் சிக்கன கடனுதவிக் கூட்டுறவுச் சங்கம் உதவி வருவதாக அந்நிறுவனத்தின் சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் ரீ. தயாளினி தெரிவித்தார்.

சர்வதேச தொண்டு நிறுவனமான சுவீடன் கூட்டுறவு நிலையத்தின் அனுசரணையுடன் இடம்பெற்ற இந்நிகழ்வை வவுணதீவு துர்க்கா மகளிர் சிக்கன கடனுதவிக் கூட்டுறவுச் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது.

தீர்மானம் எடுக்கும் செயற்பாடுகளினூடான மாற்றங்களில் செல்வாக்குச் செலுத்துவதற்காக சிறுவர்களையும் இளவயதினரையும் வலுவூட்டல் எனும் திட்டத்தின் கீழ் சிறுவர்களினால் நெறியாள்கை செய்து தயாரிக்கப்பட்ட விழிப்புணர்வு நாடகமும் பெருவரவேற்பைப் பெற்றது.

வறுமை காரணமாக பெண்கள் வீட்டுப் பணிப்பெண்களாக மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்வதால் குடும்பத்திலுள்ள குழந்தைகளின் கல்வி சீரழிவதோடு இளவதுத் திருமணம், விவாகரத்து, மதுபோதை, சமூகச் சீரழிவுகள் உள்ளிட்ட இன்னும் பல சமுதாயச் சீர்கேடுகள் தொடராக இடம்பெறுவதாக விழிப்புணர்வு கலாச்சார நிகழ்வில் சுட்டிக்காட்டப்பட்டது.

இந்நிகழ்வில் கிராம மக்கள், அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், பொலிஸார், சமூக நல செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.