யுத்தத்திற்கு பின்னர் பிரிவினையை யாரும் இங்கு கோரவில்லை -இரா.சம்பந்தன்

யுத்தம்முடிவுக்கு வந்ததன் பின்னர் இந்த நாட்டில் பிரிவினையை யாரும் கோரவில்லையென தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.


பாராளுமன்ற பொதுத்தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரக்கூட்டங்கள் நடாத்தப்பட்டுவருகின்றன.

மட்டக்களப்பு தொகுதிக்கான தேர்தல் பிரசாரக்கூட்டம் நேற்று மாலை மட்டக்களப்பு பஸ்நிலையம் முன்பாக தமிழரசுக்கட்சியின் முக்கிஸ்தரும் சட்டத்தரணியுமான பி.பிரேம்நாத் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்,தமிழரசுக்கட்சி தலைவர் மாவை சேனாதிராஜா மற்றும் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர்கள்,கட்சி ஆதரவாளர்களும் கலந்துகொண்டனர்.

இதன்போது வேட்பாளர் உரைகளும் நடைபெற்றதுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் சிறப்புரையும் நடைபெற்றது.
சர்வதேச சமூகத்தினால் தமிழ் மக்களினால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு அரசியல் அமைப்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பு பார்க்கப்படுகின்றது.வேறு எந்த தமிழ் கட்சிகளையும் சர்வதேசம் கவனத்தில் கொள்ளவில்லை.

நாங்கள் இரண்டு தரப்பினரும் ஒன்றிணைந்து ஒரு தீர்வுத்திட்டத்தினைப்பெற்றுக்கொள்ளும் வகையிலான செயற்பாடுகளை முன்னெடுக்கவேண்டும்.

இந்த நாட்டில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டுள்ளது.மகிந்த ராஜபக்ஸ ஒருபோதும் தமிழர்களின் பிரச்சினையை தீர்த்துவைக்க விரும்பவில்லை.எமது உடனடி தேவையினைக்கூட பூர்த்திசெய்ய அவர் விரும்பவில்லை.அவருடன் பல தடவைகள் நாங்கள் பேசியுள்ளோம்.

அவர் அந்த பேச்சுவார்த்தையின்போது எங்களை ஏமாற்றுவதை நோக்கமாக கொண்டாரே தவிர தமிழர்களுக்கான உரிமையினை வழங்குவதற்கு அவர்களின் தேவைகளை பூர்த்திசெய்வதற்கான எந்த நோக்கமும் அவருக்கு இருக்கவில்லை.