மு.கா.வின் மாவட்ட எழுச்சி மாநாட்டை புறக்கணித்த பஷீர் சேகுதாவூத்

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பொது விளையாட்டரங்கில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மாவட்ட எழுச்சி மாநாட்டை அக்கட்சியின் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான பஷீர் சேகுதாவூத் முற்றாகப் புறக்கணித்துள்ளார்.


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான நஸீர் அஹமட்டின் ஏற்பாட்டில் சனிக்கிழமை இந்த எழுச்சி மாநாடு இடம்பெற்றது.

கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் உட்பட உயர் மட்டப் பிரதிநிதிகள், வேட்பாளர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் இதில் கலந்து கொண்டனர்.

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கு மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் மக்களது ஆதரவைத் திரட்டிக் கொள்ளும் வகையில் இந்த எழுச்சி மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டதின் பின்னர் இடம்பெற்ற எந்தவொரு பிரச்சாரக் கூட்டத்திலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான பஷீர் சேகுதாவூத் இதுவரை எந்தவொரு நிகழ்விலும் கலந்து கொள்ளவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

அவருக்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வாய்ப்போ தேசியப் பட்டியலுக்கூடாக நாடாளுமன்றம் செல்வதற்கான வாய்ப்போ கட்சித் தலைமையால் வழங்கப்படவில்லை என்ற அதிருப்தி காரணமாகவே பஷீர் சேகுதாவூத் ஸ்ரீலமுகா கூட்டங்களில் பங்கேற்பதைத் தவிர்த்து வருவதாகக் கூறுகின்றார்.