கையகப்படுத்தியுள்ள தனியார் காணியிலிருந்து வெளியேறுமாறு பொலிஸ் மா அதிபருக்கு சட்டத்தரணி நோட்டீஸ்

மட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனை கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மயிலங்கரச்சையில் பொலிஸார் கையகப்படுத்தியுள்ள காணியிலிருந்து காலி செய்துவிட்டு வெளியேறிவிடுமாறு சட்டத்தரணி மூலம் பொலிஸ் மா அதிபருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.


மயிலங்கரச்சை, தியாவட்டுவான் வாழைச்சேனை எனும் முகவரியைச் சேர்ந்த எச்.எல்.பி. நந்தபால என்பவருக்குச் சொந்தமான காணித்துண்டொன்றை கையகப்படுத்தியுள்ள பொலிஸார் அக்காணியை அதன் உரிமையாளருக்குக் கையளிக்க மறுத்து வருகின்ற நிலையில் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

29.07.2015 தேதியிட்டு சட்டத்தரணி ரீ. தட்சணாமூர்த்தியினால் பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பப்பட்டுள்ள அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

உங்கள் பொலிஸ் திணைக்களம் எனது கட்சிக்காரரான எச்.எல்.பி. நந்தபால என்பவருக்குச் சொந்தமான நாவலடி – வாழைச்சேனையில் அதிமேதகு ஜனாதிபதியினால் 30.12.2010 ஆம் திகதி கொடையாக வழங்கப்பட்ட காணியை கையகப்படுத்தியுள்ளது.

ஆகையினால் இக்கடிதம் கிடைத்த ஒரு மாதத்திற்குள்ளாக எனது கட்சிக்காரருக்குச் சொந்தமான காணியிலிருந்து வெளியேறிவிடவேண்டும், தவறும் பட்சத்தில் இந்தக் காணியை மீட்டெடுப்பதற்கு சிவில் வழக்கு முன்னெடுக்கப்படும் என்பதை அறிவுறுத்துகின்றேன்.” என்று எழுதப்பட்டுள்ளது.

இந்த நோட்டீஸின் பிரதிகள் மட்டக்களப்பு அரசாங்க அதிபர், மட்டக்களப்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், காணி ஆணையாளர் நாயகம், கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனைப் பிரதேச செயலாளர், கிழக்கு மாகாணக் காணி ஆணையாளர் ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.