மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர்கள் தெரிவு நிறைவுபெற்றது –சில மாற்றங்களுடன் நிறைவு

தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான வேட்பாளர் தேர்வு பூர்த்தியடைந்துள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கிஸ்தர் ஒருவர் தெரிவித்தார்.


பெரும் இழுபறியின் மத்தியில் இருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் தெரிவு இன்று வியாழக்கிழமை முடிவுக்கு வந்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசாவை தலைமை வேட்பாளராக கொண்டு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன்,சீ.யோகேஸ்வரன்,கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான இரா.துரைரெட்னம்,கோவிந்தன் கருணாகரம் மற்றும் புதிய முகங்களாக மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய உதவி கல்விப்பாளராக கடமையாற்றிய எஸ்;.சிறிநேசன்,பிரபல தமிழ் ஆசிரியர் எஸ்.எஸ்.அமல் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கு.சௌந்தரராஜன் ஆகியோர் களமிறங்கவுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கிஸ்தர் ஒருவர் தெரிவித்தார்.

இதன்படி பட்டிருப்பு தொகுதியில் தமிழரசுக்கட்சி சார்பாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா,பா.அரியநேத்திரன் மற்றும் ரெலோ சார்பில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் ஆகியோர் போட்டியிடவுள்ளதுடன் மட்டக்களப்பு தொகுதியில் தமிழரசுக்கட்சி சார்பாக பிரதிக்கல்விப்பணிப்பாளர் எஸ்.சிறிநேசனும், கு.சௌந்தரராஜனும்,ஈ.பி.ஆர்.எல்.எப்.சார்பாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னமும் போட்டியிடவுள்ளதுடன் கல்குடா தொகுதியில் தமிழரசுக்கட்சி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரனும் புளோட் சார்பாக பிரபல தமிழ் ஆசிரியர் எஸ்.எஸ்.அமல் ஆகியோரும் களமிறங்கவுள்ளதாக தெரியவருகின்றது.

எதிர்வரும் பொதுத்தேர்தலில் புதிய முகங்களை களமிறக்குமாறு மட்டக்களப்பு மாவட்டத்தில் விடுக்கப்பட்டுவந்த தொடர்ச்சியான கோரிக்கையின் மத்தியில் இரண்டு புதிய முகங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் களமிறக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை கல்குடா தொகுதியில் கிழக்கு மாகாண பொலிஸ் ஆணைக்குழுவின் பணிப்பாளர் சாமித்தம்பி போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டபோதிலும் இறுதியில் அவரது பெயர் நீக்கப்பட்டதாக அறியமுடிகின்றது.

இதேவேளை நாளை வெள்ளிக்கிழமை பிற்பகல் தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா தெரிவித்தார்.