தமிழை சர்வதேச ரீதியில் பெருமையடையச்செய்தவர் சுவாமி விபுலானந்தர் –மட்டக்களப்பு ஆணையாளர்

சர்வதேச ரீதியில் தமிழ் இனத்தினையும் மொழியையும் பெருமையடைச்செய்தவர் சுவாமி விபுலானந்தர் என மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம்.உதயகுமார் தெரிவித்தார்.


முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரின் 68சிரார்த்த தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன.

மட்டக்களப்பு இந்து இளைஞர் மன்றம் ஏற்பாடுசெய்த நிகழ்வு இன்று காலை மட்டக்களப்பு நகரில் திருநீற்றுக்கேணி பூங்காவில் உள்ள சுவாமி விபுலானந்தரின் சிலை அருகே நடைபெற்றது.

மட்டக்களப்பு இந்து இளைஞர் மன்றத்தின் முன்னாள் பொதுச்செயலாளர் த.யுவராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம்.உதயகுமார் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இந்த நிகழ்வில் கிழக்கு பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் பேராசிரியர் மா.செல்வராசா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது அதிதிகளினால் சுவாமி விபுலானந்தரின் சிலைக் மலர் மாலை அணிவிக்கப்பட்டதுடன் தமிழ் மொழித்தாய் வாழ்த்தும் பாடப்பட்டது.

இதன்போது தேசிய ரீதியில் தமிழ் மொழி தின போட்டிகளில் சாதனை படைத்த தமிழ்,முஸ்லிம்,சிங்கள மாணவர்கள் ஆறு பேர் கௌரவிக்கப்பட்டனர்.கிழக்கு மாகாணத்தில் மூன்று மாவட்டங்களிலும் இருந்து இவர்கள் தெரிவுசெய்யப்பட்டனர்.