ஏறாவூர் மகா வித்தியாலயத்தில் பெற்றோர் ஆர்ப்பாட்டம்

பாடசாலை அதிபரை இடமாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு கிளை செயலாளர் உதயரூபனின் செயற்பாட்டினைக்கண்டித்தும் மட்டக்களப்பு கல்வி வலயத்துக்குட்பட்ட ஏறாவூர் தமிழ் மகா வித்தியாலய மாணவர்களின் பெற்றோர் ஆர்ப்பாட்டம் ஒன்றினை நடாத்தினர்.


இன்று காலை பாடசாலையின் வாயிற்கதவினை மூடி பெற்றோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த ஆர்ப்பாட்டத்தின்போது புதிய அதிபரை நாங்கள் அனுமதிக்கமாட்டோம்.தற்போதுள்ள பிரதி அதிபரையே தொடர்ந்து எமது பாடசாலைக்கு நியமித்துதாருங்கள் என ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பெற்றோர் தெரிவித்தனர்.

புதிய அதிபர் தொடர்பில் தமக்கு நம்பிக்கையில்லையென தெரிவித்த பெற்றோர் தற்போது பிரதி அதிபராக கடமையாற்றுபவர் பாடசாலையினை பொறுப்பேற்ற பின்னரே தமது மாணவர்களுக்கு சிறந்த கல்வி வழங்கப்பட்டுவருவதாகவும் தெரிவித்தனர்.

கடந்த காலத்தில் பாடசாலையில் கல்வி நடவடிக்கைகள் மந்த கதியில் இருந்த காரணமாக மாணவர்கள் மரநிழலிலும் வீதியோரங்களிலுமே திரிந்த நிலையில் அந்த நிலையினை தற்போதை பாடசாலையின் பிரதி அதிபரே மாற்றியமைத்து சிறந்த கல்வியை மாணவர்கள் பெற்றுக்கொண்டதாகவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பெற்றோர் தெரிவித்தனர்.

தற்போது புதிய அதிபராக நியமிக்கப்பட்டவர் இந்த பாடசாலைக்கு பொருத்தமற்றவர் என தெரிவித்த பெற்றோர் புதிய அதிபர் ஒருவர் நியமிக்கவேண்டுமாயின் வேறு ஒருவரை நியமித்துதருமாறும் கோரிக்கை விடுத்தனர்.

தமது பாடசாலையின் இன்றைய நிலைக்கு காரணமாக இருக்கின்ற இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு கிளை செயலாளர் உதயரூபனுக்கு தமது கடும் கண்டனத்தினையும் பெற்றோர் இதன்போது தெரிவித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின்போது அங்கு வருகைதந்த கிழக்கு மாகாணசபையின் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார், மட்டக்களப்பு வலய கல்விப்பணிப்பாளர் கே.பாஸ்கரன் ஆகியோர் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடாத்தினர்.

இதன்போது கிழக்கு மாகாணசபையின் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் வழங்கிய உறுதிமொழியையடுத்து ஆர்ப்பாட்டம் நிறுத்தப்பட்டது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த கிழக்கு மாகாணசபையின் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார்,

தற்போது அதிபராக நியமனம் பெற்றவரை அனுமதிக்கவேண்டாம் என பெற்றோர் இன்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இது தொடர்பில் கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணியின் கவனத்துக்கு கொண்டுசென்றபோது எதிர்வரும் புதன்கிழமை இது தொடர்பில் ஆராய்வதாகவும் அதுவரை தற்போது கடமையாற்றும் அதிபரையே கடமையாற்றுமாறு பணித்ததாகவும் தெரிவித்தார்.