வண பிதா கேபியர் ஞாபகார்த்த கூடைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் மட்டக்களப்பு அணி சம்பியனாக முடிசூடியது

மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரியின் பழைய மாணவர்கள் சங்கங்கள் இணைந்து நடாத்திய இலங்கையின் உள்ள பிரபல அணிகளுக்கிடையிலான கூடைப்பந்தாட்ட போட்டியில் மட்டக்களப்பு அணி சம்பியனாக தெரிவுசெய்யப்பட்டுள்ளது.


வண பிதா கேபியர் ஞாபகார்த்தமாக இந்த கூடைப்பந்தாட்ட போட்டியானது 04 வது வருடமாகவும் இந்த ஆண்டு நடைபெற்றது.

வெள்ளிக்கிழமை ஆரம்பமான இந்த சுற்றுப்போட்டிகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை வரை புனித மைக்கேல் கல்லூரியின் உள்ளக அரங்கில் நடைபெற்றது.

மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரியின் பழைய மாணவர்களின் கொழும்புக்கிளை மற்றும் மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரியின் பழைய மாணவர்கள் சங்கம் இணைந்து இந்த போட்டியை நடாத்தியிருந்தது.

இதன் இறுதிப்போட்டி நிகழ்வானது நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை சிறப்பாக நடைபெற்றது.

இறுதிப்போட்டி நிகழ்வில் மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட பிரதிப்பொலிஸ்மா அதிபர் வாஹிஸ உட்பட பலர் கலந்துகொண்டனர்.

எட்டு அணிகளிலும் இறுதிப்போட்டியானது மட்டக்களப்பு அணிக்கும் இணைந்த பல்கலைக்கழக அணிக்கும் இடையில் நடைபெற்றது.

இந்த போட்டியில் ஆரம்பம் தொடக்கம் இணைந்த பல்கலைக்கழக அணி சிறப்பாக விளையாடிவந்த நிலையில் இடைவேளைக்கு பின்னர் மட்டக்களப்பு அணி இடைவேளைக்கு பின்னர் சிறப்பாக விளையாடி வெற்றியை அடைந்தது.

இரு அணிகளும் சமமான புள்ளிகளை இடைவேளைக்கு பின்னர் பெற்றுவந்த நிலையில் இறுதி பத்து நிமிடங்களில் மட்டக்களப்பு அணி தொடர்ச்சியாக கோல்களை போட்டு வெற்றியை ஈட்டியது.

கடந்த ஆண்டு நடைபெற்ற போட்டியில் இலங்கை இராணு அணி சம்பியனாக தெரிவுசெய்யப்பட்டிருந்த நிலையில் இந்த முறை அந்த அணிக்கு இறுதிப்போட்டியை எட்டமுடியவில்லை.

இதன் அடிப்படையில் இந்த ஆண்டுக்கான சம்பியனாக மட்டக்களப்பு அணி தெரிவுசெய்யப்பட்டதுடன் இரண்டாவது இடத்தினை இணைந்த பல்கலைக்கழக அணியும் மூன்றாவது இடத்தினை மொனராகலை அணியும் பெற்றுக்கொண்டது.

இந்த போட்டியில் சிறப்பாட்டக்காரராக மட்டக்களப்பு அணியை சேர்ந்த திமோதன்நிதுஸன் தினேஸ்காந்த் பெற்றுக்கொண்டதுடன் சிறந்த தடுப்பாட்டக்காரராக இணைந்த பல்கலைக்கழக அணியை சேர்ந்த டெரன் பெற்றுக்கொண்டார்.ஐந்து போட்டியில் கலந்துகொண்டு 188 புள்ளிகளைப்பெற்றுக்கொண்ட கொழும்பு அணியை சேர்ந்த டிலானுக்கும் வெற்றிக்கிண்ணம் வழங்கப்பட்டது.