கிழக்கு மாகாணத்தில் நவீன உடற்பயிற்சி நிலையம் மட்டக்களப்பு நகரில் திறந்துவைப்பு

கிழக்கு மாகாணத்தில் முதன்முறையாக சகல வசதிகளும் கொண்ட சர்வதேச தரத்திலான அதி நவீன உபகரணங்களுடன் கூடிய புதிய உடற்பயிற்சி நிலையம் மட்டக்களப்பு நகரில் திறந்துவைக்கப்பட்டது.


மட்டக்களப்பு மாவட்டத்தினை மையமாகக் கொண்டு இயங்கிவரும் இலங்கை சோட்டாக்கன் கராத்தே கழகத்தினால் இந்த  உடற்பயிற்சி நிலையமானது இல 1 புதிய கல்முனை வீதி,மட்டக்களப்பு (திறந்த பல்கலைக்கழகத்திற்கு அருகாமையில்) எனும் முகவரியில் நேற்று சனிக்கிழமை மணியளவில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இலங்கை சோட்டாக்கன் கராத்தே கழகத்தின் தலைவர் கே.ரி.பிரகாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாணசபையின் முன்னாள் முதலமைச்சரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ்,வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் கே.தர்மரெட்னம்,பொறியியலாளர் பத்மராஜா,முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன்,மட்டக்களப்பு வலய கல்விப்பணிப்பாளர் கே.பாஸ்கரன்,உடற்கல்வி உதவி பணிப்பாளர் வி.லவகுமார்,அம்பாறை மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் ஈஸ்பரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

உடற்கட்டுமான மற்றும் உடற்பயிற்சி தொடர்பான தகைமை,துறைசார் அனுபவம் வாய்ந்த பயிற்றுனர்களைக் கொண்டு பல்வேறு உடற்கட்டுமான தேவைகளின் பால் ஆர்வமுள்ள ஆண் பெண் இருபாலருக்குமான உடற் பயிற்சிகள் வழங்கப்படவிருக்கின்றன.

பெண்களுக்கான பெண் பயிற்றுனர்களும், தனியான பாதுகாப்புடன் கூடிய சௌகரியமான நேர ஒதுக்கீட்டுடன் பயிற்சிகள் வழங்கப்படவிருப்பது குறிப்பிடத்தக்கது.

மேற்படி பயிற்சிகளின் மூலம் ஈட்டப்படும் வருமான நிதியானது கழக விளையாட்டுத்துறை மேம்பாட்டுக்காக மட்டுமே  பயன்படுத்தப்பட இருப்பதால், உடல் கட்டுமான – உடலாரோக்கியம் தொடர்பான அக்கறை கொண்ட அனைவரையும் மேற்படி பயிற்சிகளில் இணைந்து கொள்வதன் மூலம் கழக வீரர்களின் விளையாட்டுத்துறைசார் மேம்பாட்டிற்கு பங்களிப்புச் செய்யுமாறு சோட்டக்கன் கராத்தே கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.