அழகுக்கலை பயிற்சியை பூர்த்திசெய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் மற்றும் கண்காட்சி நிகழ்வு

சொலிட்டாரிட்டிஸ் அமைப்பு மட்டக்களப்பு சுவிஸ் ஸ்டா அமைப்புடன் இணைந்து மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பிரதேசத்துக்குட்பட்ட வறுமை நிலையில் உள்ள யுவதிகளுக்காக நடாத்தப்பட்ட கைப்பணி மற்றும் அழக்குக்கலை பயிற்சியை பூர்த்திசெய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.


மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் சொலிட்டாரிட்டிஸ் அமைப்பின் தலைவர் கமலதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சமுர்த்தி வீடமைப்பு பிரதியமைச்சர் எம்.எஸ்.அமீர்அலி பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

சிறப்பு அதிதியாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தொல்லியல் ஆய்வாளருமான செல்வி க.தங்கேஸ்வரி,சுவிஸ் ஸ்டா அமைப்பின் பணிப்பாளர் ஆதரிபன் பிரீட்ஸ்,சுவிஸ் லூசியிங்க அழகியல் கற்கைகள் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கிறிஸ்டி மோசன்,சுவிஸ் இசை ஒன்றிய தலைவர் மரியான் டோரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது பயிற்சியை நிறைவுசெய்த மாணவர்களினால் உற்பத்திசெய்யப்பட்ட கைப்பணி பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்ததுடன் அதனை அதிதிகள் பார்வையிட்டனர்.

இதனைத்தொடர்ந்து நிகழ்வுகள் நடைபெற்றதுடன் பயிற்சிகளை நிறைவுசெய்த 27 யுவதிகளுக்கான சான்றிதல்களும் வழங்கிவைக்கப்பட்டன.
வடகிழக்கில் அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வாதாரத்தினை கட்டியெழுப்பும் கற்கை நெறிகளை சுவிஸ் ஸ்டா அமைப்பு கடந்த காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொண்டுவந்தது.

இதன் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த கால யுத்தத்தினால் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்ட பகுதியாக பட்டிப்பளை பிரதேசம் உள்ளது.