மயிலம்பாவெளியில் வை.எம்.சி.ஏ.யின் ஏற்பாட்டில் வாசிகசாலை திறந்துவைப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பற்று பிரதேச செயலகத்துக்குட்பட்ட மயிலம்பாவெளி,விவேகானந்தபுரம் நீண்டகாலமாக எதிர்நோக்கப்பட்டுவந்த வாசிகசாலை இல்லாத குறை நீக்கப்பட்டுள்ளது.


மாணவர்களின் வாசிப்பு திறனை மேம்படுத்துவதன் மூலம் பாடசாலைகளில் கற்றல் நடவடிக்கைகளில் திறமையினை வெளிப்படுத்தும் வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பின்தங்கிய பகுதிகளில் வை.எம்.சி.ஏ.யினால் வாசிகசாலைகள் அமைக்கப்பட்டுவருகின்றன.

இலங்கையில் நலிவுற்ற பெண்களை வலுப்படுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ் ஐரோப்பிய ஒன்றிய நிதியுதவியுடன் சேவ்த சில்ரனின் அமுலாக்கத்தின் கீழ் இந்த வாசிகசாலை வை.எம்.சீ.ஏ.அமைப்பினால் அமைக்கப்பட்டுள்ளது.

இதன் திறப்பு விழாவில் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர் கா.சித்திரவேல் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு வை.எம்.சீ.ஏ.யின் பொதுச்செயலாளர் டாக்டர் டி.டி.டேவிட்,ஏறாவூர்ப்பற்று பிரதேசசபையின் செயலாளர் திருமதி குமுதா ஜோன்பிள்ளை, ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகத்தின் சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி இந்துமதி விமலராஜா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

மாணவர்களினதும் இளைஞர் யுவதிகளினதும் தேடல்களை அடிப்படையாக்கொண்ட நூல்கள் இங்கு வைக்கப்பட்டுள்ளன.