மண்டூர் கமநல அமைப்புகளின் ஏற்பாட்டில் மண்டூர் கமநல அமைப்புகளின் நிர்வாகிகளுடன் கிழக்கு மாகாணசபையின் விவசாய அமைச்சர் துரைராஜசிங்கம் நேற்று (14) சந்திப்பொன்றினை மேற்கொண்டார்.
இச்சந்திப்பானது மண்டூர் பொதுநூலக கேட்போர் கூடத்தில் ஓய்வு பெற்ற விவசாயப் பேதனாசிரியர் பரமானந்தராஜர் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண விவசாய அமைச்சரும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமான கிருஸ்ணபிள்ளை துரைராஜசிங்கம் கலந்து கொண்டார்.
அத்துடன் மட்டக்களப்பு மத்தியஸ்த சபைத் தலைவரும் சமாதான நீதிவானுமாகிய விஸ்ணுமூர்த்தி, கமநல அபிவிருத்தி உத்தியோகஸ்தர் ஜெயகாந்தன், விவசாயப் போதனாசிரியர்கள், மண்டூர் பிரதேசத்தின் கமநல அமைப்புகள் பலவற்றின் நிர்வாகத்தினர் எனப் பலர் கலந்து கொண்டனர்.
கமநல அமைப்புகளினால் அவரவர் கண்டங்களில் இருக்கின்ற பல முக்கிய குறைபாடுகள் விவசாய அமைச்சர் முன்னிலையில் தெரிவிக்கப்பட்டது.
குளம் புனரமைப்பு, வாய்க்கால்கள் திருத்தி தரப்படல், பாதைகள் சீர்செய்து தரப்படல், அணைமுறிவுகளை கட்டித் தரல், நெல் களஞ்சியசாலை அமைத்தல் போன்ற பல பிரச்சினைகள் சுட்டிக்காட்டப்பட்டதுடன் அமைச்சரிடம் கடிதம் மூலமும் தெரிவிக்கப்பட்டன.
பின்னர் மண்டூர் பிரதேசத்தில் நெல் களஞ்சியசாலை அமைப்பதற்கு உரிய இடம் இருப்பதாக மக்களால் தெரிவிக்கப்பட்ட மண்டூர் ஒல்லிவால் மடு வீதியில் அமைக்கப்பட்டு தற்போது இயங்காத நிலையில் உள்ள வேல்ட்;விசன் அமைப்பின் மாதிரி விவசாயபப் பண்ணையினை அமைச்சர் நேரில் சென்று பார்வையிட்டதுடன் மண்டூர் கமநல கேந்திர நிலையத்திற்கு அருகில் இருக்கும் பழைய கட்டிடத் தொகுதியையும் விவசாயப் பயிற்சி நிலைய கட்டிடத்தையும் பார்வையிட்டு சமுளையடிவட்டடை வீதியினையும் சென்று பார்வையிட்டார்.
இவைகள் தொடர்பில் தான் மத்திய அரசுடனும் கலந்துரையாடி அதற்கான தீர்வுகளை மேற்கொள்வதற்கு தன்னாலான முயற்சிகளை மேற்கொள்வதாகவும் அமைச்சர் உறுதியளித்தார்.
இந்நிகழ்வு விவசாயம் தொடர்பில் புதிய விவசாய அமைச்சர் கன்னி ஒன்றுகூடல் என்பதும் குறிப்பிடத்தக்கது.