போலி தேன் போத்தல்கள் மட்டக்களப்பு நகரில் பறிமுதல் -போலிகளைக்கண்டு ஏமாறாதீர்கள் என எச்சரிக்கை

மட்டக்களப்பு நகர்ப்பகுதியில் போலியான பாணங்களை விற்பனை செய்வோர் தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படவேண்டும் என பொதுச்சுகாதார பரிசோதர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மட்டக்களப்பு நகரில் சுத்தமான தேன் எனக்கூறி விற்பனைசெய்யப்பட்ட பெருமளவான சீனிபாணி போத்தல்களை பொதுச்சுகாதார பரிசோதகர் கைப்பற்றியுள்ளனர்.

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட வெட்டுக்காடு பகுதியில் வெட்டுக்காடு பொதுச்சுகாதார பரிசோதகர் சோ.அமுதபாலன் தலைமையில் காலை மட்டக்களப்பு நகரில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின்போது இந்த போலி தேன் போத்தல்கள் மீட்கப்பட்டுள்ளன.

இந்த போலி தேன் போத்தல்களை கொண்டுவந்தவர் அவற்றினை கைவிட்டுவிட்டு தப்பிச்சென்றுள்ளதாகவும் அவரினை கைதுசெய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகவும் பொதுச்சுகாதார பரிசோதகர் சோ.அமுதபாலன் தெரிவித்தார்.

தேன் என்று கூறிக்கொண்டு சீனிப்பாகுப்போத்தல்களை 800ரூபா முதல் 1000ரூபா வரையில் விற்பனைசெய்துவந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

போலியான பாணங்கள் தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படவேண்டும் எனவும் இவை சுகாதாரத்துக்கு பெரும் தீங்குகளை ஏற்படுத்தக்கூடியதாகவும் இருக்கலாம் எனவும் பொதுச்சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.

நாட்டின் பல பாகங்களில் அண்மைக்காலமாக போலியான முறையில் தயாரிக்கப்படும் பாணங்கள் கைப்பற்றப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.