விவசாய துறையில் பெண்களின் தலைமைத்துவத்தினை முன்னேற்ற கள பயிற்சி நெறிகள் ஆரம்பம்

(லியோன்)

கிழக்கு மாகாண விவசாயத்துறையில் பெண்களின் தலைமைத்துவத்தை முன்னேற்றல் என்ற திட்ட நோக்கத்திற்கமைய பெண்களுக்கான உட்கள மற்றும் வெளிக்களப் பயிற்சிநெறி ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் மாவட்ட விவசாயப்பயிற்சி நிலைய பண்ணை முகாமையாளர் ஏ.சுகுந்ததாஸன் தெரிவித்தார்.


மட்டக்களப்பு மாவட்ட விவசாயத்திணைக்களமும் பிஸ்னஸ் கிரியேஷன்ஸ்   நிறுவனமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள மேற்படி பயிற்சிநெறி வியாழக்கிழமை (26) மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் பண்ணை முகாமையாளர் ஏ.சுகுந்ததாஸனால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

விவசாயம் சார்ந்த வியாபார வழிகாட்டிகளாக உள்வாங்கப்பட்ட சுமார் 30 இளம் பெண்கள்  இந்தப் பயிற்சிநெறியில் பங்கெடுத்துள்ளனர். கிழக்கு மாகாண விவசாயத்துறையில் பெண்களின் தலைமைத்துவத்தை முன்னேற்றல் என்ற திட்ட நோக்கத்திற்கமைய இந்தப் பயிற்சிநெறிக்கு தமது நிறுவனம் நிதி அனுசரணை வழங்குவதாக ஒக்ஸ்பாம் நிறுவன நிகழ்ச்சித் திட்ட இணைப்பாளர் எஸ்.செந்தூரன் தெரிவித்தார்.

பயிற்சி ஆரம்பிப்பு நிகழ்வில் மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் மாவட்ட விவசாயப் பயிற்சி நிலைய பண்ணை முகாமையாளர் ஏ.சுகுந்ததாஸன், மட்டக்களப்பு மாவட்ட விவசாய உதவி விரிவாக்கப் பணிப்பாளர் செல்வி சிவஞானம் மங்களகேசரி, பண்ணைப் பெண்கள் விவசாய விரிவாக்க உத்தியோகத்தர் கே.ராஜாம்பிகை, விவசாயப் போதனாசிரியர் எம்.ஐ.எம்.ஜமால்தீன், ஒக்ஸ்பாம் நிறுவன நிகழ்ச்சித்திட்ட இணைப்பாளர் எஸ்.செந்தூரன், அதன் கிழக்கு மாகாண  நிகழ்ச்சி இணைப்பாளர் ஆர்.சிவாஸ்கரன், திட்ட அதிகாரி வை.பிரியதர்ஷினி, திட்ட இணைப்பதிகாரி கே.ஜயனிகா, பிஸ்னஸ் கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் திட்ட அதிகாரி எஸ். தினேஸ் உட்பட திட்டப் பயனாளிகளான 30 பெண்களும் கொண்டனர்.

ஒக்ஸ்பாம் நிறுவனத்தின் நிதி அனுசரணையுடன் 20 நாட்கள் கொண்டதாக இந்த உட்கள வெளிக்கள செயன்முறைப் பயிற்சிநெறி ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.