பேராசிரியர் சி.மௌனகுருவின் கூத்துப் பயிற்சிநெறியின் ஆரம்ப நிகழ்வு

பேராசிரியர் சி.மௌனகுருவின் அரங்க ஆய்வுகூடத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள கூத்துப் பயிற்சிநெறியின் ஆரம்ப நிகழ்வுகள் நேற்றைய தினம் சனிக்கிழமை பகல் (21) மட்டக்களப்பு பார் வீதியில் பேராசிரியர் சி.மௌனகுரு தலைமையில் நடைபெற்றன.


இந்த நிகழ்வுகளில் அமெரிக்கரும் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக பேராசிரியருமான பேர்னாட் பேட் கலந்து கொண்டார்.

அத்துடன், மண்முனைவடக்கு பிரதேச செயலாளர் வி.தவராஜா, கிழக்குப் பல்கலைக்கழக விபுலானந்த இசைநடனக்கல்லூரி விரிவுரையாளரகள்,  அண்ணாவியார்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

அறிமுக நிகழ்வில் அமெரிக்கரும் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக பேராசிரியருமான பேர்னாட் பேட் இலக்கியம், இதிகாசங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து தமிழில் உரையாற்றியமை சிறப்பம்சமாக இருந்தது.

இப்பயிற்சியில் 40 கூத்து ஆர்வலர்கள் இணைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு கூத்தை அறிதல்-பயில்தல்-ஆக்கல்.  -புதிய பரிமாணங்களில் வளர்த்தல் என்ற வகையில் ஆறு மாத காலப் பயிற்சி நெறி நடத்தப்படவுள்ளது.

ஆர்வமுடைய இளம் தலைமுறையினரை கூத்தில்,  செயல் முறையிலும் ,கோட்பாட்டிலும், புத்தாக்கங்களிலும் பாண்டித்திய முள்ளவர்களாக்குவதை நோக்காகக் கொண்டு அரங்க ஆய்வுகூடம் ஆறு மாதகாலப்பயிற்சி நெறியொன்றினை இலவசமாக நடத்தவுள்ளது. இப்பயிற்சி நெறியினை  பேராசிரியர். சி. மௌனகுரு தேர்ந்தெடுக்கப் பட்ட அண்ணாவிமார்களின் துணையுடன் நடத்தவுள்ளார்.

பயிற்சியின் போது தேர்ந்தெடுக்கப்பட்ட அண்ணாவிமார்களுடனான கலந்துரையாடல்களும் காலம் சென்ற பிரபல்யமான அண்ணாவிமார்களுடன் (உதாரணம்- நாகமணிப்போடி, செல்லையா, நோஞ்சிப்போடி, நல்லலிங்கம்) 1996 ஆம் ஆண்டுகளில் நடாத்திய உரையாடல்களின் காணொளிக் காட்சிகள் இடம்பெறும் என்று பேராசிரியர் சி.மௌனகுரு தெரிவித்தார்.