கடந்த வாரம் கிழக்க மாகாண ஆளுனராக சிங்கள முன்னாள் சிவில் சேவை அதிகாரி ஒஸ்ரின் பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால் முன்னாள் பொத்துவில் பொலிஸ் அதிகாரியும் முன்னாள் எம்பியுமான அப்துல் மஜிட் நியமிக்கப்படவிருந்தார்.
இதற்கு முஸ்லிம் காங்கிரஸ் முழுமையான எதிர்ப்பைக் காட்டியது. அதனால் முஸ்லிம் ஆளுனர் நியமிக்கப்படவில்லை. நாங்கள்தான் முஸ்லிம்களின் ஏகபிரதிநிதி என்று மார்தட்டுகின்ற இந்த முஸ்லிம் காங்கிரஸ், முஸ்லிம் ஆளுனர் ஒருவர் நியமிக்கப்படுவதில் அவர்களுக்கு என்ன பிரச்சினையுள்ளது என்பது தெரியவில்லை.
மஜீட் ஆளுனராக நியமிக்கப்பட்டால் மு.கா வளர்ச்சி பாதிக்கப்படலாம் என்ற அச்சம் மு.கா வுக்கு உள்ளது. காரணம் ஐ.தே.க.யில் ஆரம்ப காலத்தின் தன்னை இணைத்துக் கொண்டு அரசியலில் ஈடுபட்ட மஜீட் மு.கா ஸ்தாபகர் மர்{ஹம் அஸ்ரப் காலத்தில் மஜீட் அஸ்ரப்பை எதிர்த்து ஐ.தே.க காக அம்பாறை மாவட்டத்தில் தேர்தல் செய்தார்.
அதன் பின்பு அஸ்ரப்பின் மறைவுக்குப் பின்னர் மு.காங்கிரசில் இணைந்து கொண்ட மஜீட் மு.கா சில் மாகாண உறுப்பினராக தெரிவானார். ஆனால் கடந்த கிழக்கு மாகாண தேர்தலின் போது மஜீட், ஹக்கீமினால் திட்டமிட்டுத் தோற்கடிக்கப்பட்டார் என்ற குற்றச்சாட்டு உள்ளது.
அதன் பின்பு ஹக்கீக்கும் மஜீட்டுக்கும் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகள் காரணமாக கடந்த வருடம் மு.காங்கிரசில் இருந்து விலகி மீண்டும் ஐ.தே.க. யில் இணைந்து கொண்டார்.
தற்போது அம்பாறை மாவட்ட கரையோரப் பகுதி ஐ.தே.க. அமைப்பாளராக உள்ளார். இந்த நிலையில்தான் கிழக்கு மாகாண ஆளுனராக மஜீட் நியமிக்கப்படவிருந்தார்.
அந்த வாய்ப்பை முஸ்லிம் காங்கிரஸ் ஹக்கீம் தலைவர் இல்லாமல் செய்து விட்டார். ஆனால் மஜீட் ஆளுனராக நியமிக்கப்படுவதற்கு தங்களது கடும் எதிர்ப்பைக் காட்டிய ஹக்கீம் 80 வயதுடைய கல்முனை முன்னாள் அமைச்சர் மன்சூரைச் சிபார்சு செய்து அவரை ஆளுனராக நியமிக்குமாறு அரசிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
ஆனால் அரசு இந்தக் கோரிக்கையை நிராகரித்து விட்டது. காரணம் முஸ்லிம் அணியின் தலைவர் கல்முனைக்கு ஆளுனர் பதவி பெற்றுக் கொடுத்து விட்டோம் என்று சொல்லி எதிர்வரும் பொதுத் தேர்தலில் சம்மாந்துறையை இலக்கு வைத்து திகாமடுல்ல மாவட்டத்தில் களமிறங்கலாம் என்று திட்டமிட்டிருந்தார்.
ஆனால் அந்த இலக்கு தவறி விட்டதனால் அவருக்கு அம்பாறையில் களமிறங்கும் எண்ணத்தில் மாற்றமிருப்பதாக எண்ணலாம். ஹக்கீம் மட்டக்களப்பில் அல்லது திருகோணமலையில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடலாம்.
ஆனால் கிழக்கு மாகண ஆளுனராக மஜீட் நியமிக்கப்படக் கூடாது என்று இந்த முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் அரசிடம் மன்றாடியுள்ளார்.
அதனால்தான் கிழக்கு மாகாண ஆளுனர் நியமனத்தில் தொடர்ந்தும் இழுபறி நிலை உருவானது. இறுதியாக ஒஸ்ரின் பெர்னாண்டோ நியமிக்கப்பட்டார்.
இந்த விடயத்தில் உண்மை உள்ளதா என்பது குறித்து மஜீட்டிடம் தொடர்பு கொண்ட கேட்ட போது, ஆம் உண்மை என்றும் முஸ்லிம் காங்கிரஸ் தன்னை ஆளுனராக நியமிக்கக் கூடாது என்று அரசிடம் பெரும் அழுத்தம் கொடுத்தது என்றும் தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
கடந்த 2000 ஆம் ஆண்டு தொடக்கம் எனக்கு மறைமுகமாக எனது அரசியல் வளர்ச்சியில் மு.கா தலைவர் ஹக்கீம் சில நகர்வுகளை எடுத்து வந்தார்.
கடந்த 10 வருடங்களாக மஹிந்த அரசு பொத்துவில் முஸ்லிம் தமிழ் மக்களுக்கு பாரிய நெருக்குதல்களைச் செய்து வருகின்றது.
இராணுவத்தைக் கொண்டு பலவகையான நெருக்குதல்களைக் கொடுத்து வருகின்றது. பொத்துவில் தொகுதி என்று பெயர் பெற்றுள்ள பொத்துவிலுக்கு இன்னும் ஒரு எம்பி கூட இல்லை.பொத்துவில் மிகவும் பின்தள்ளப்பட்டுள்ள பிரதேசம்.
அந்தப் பிரதேசத்தை சகல வழிகளிலும் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும். ஆனால் முஸ்லிம் காங்கிரஸ் அணி எனக்கு ஆளுனர் பதவி வழங்கப்படக் கூடாது என்று முட்டுக் கட்டை போட்டதன் மூலமாக பொத்துவிலுக்கு மட்டுமல்ல கிழக்கு மாகாணத்திற்கும் நான் செய்யவிருந்த சேவையைத் தடுத்து விட்டார்கள்.
நான் காக்கிச் சட்டை அணிந்த காலத்தில் என்னால் முடிந்த வரை தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் என்ற பாகுபாடு காட்டாது சேவை செய்துள்ளேன். நான் கிழக்கு மாகாண பாதுகாப்பு இணைப்பதிகாரியாக இருந்த காலத்தில் தமிழ் மக்களுக்கும் நிறையச் சேவை செய்துள்ளேன்.
கிழக்கு ஆளுனர் பதவி கிடைத்திருந்தால் கிழக்கு மாகாண மக்களுக்கு இன மதம் பாராமல் நல்ல சேவை செய்திருக்க முடியும் என்றார். பொத்துவில் மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.
பொத்துவில் மக்களுக்கான ஒரு போராட்டத்தை இந்த முஸ்லிம் காங்கிரஸ் அணி ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக அநாதரவாக விடப்பட்டுள்ள பொத்துவில் பகுதியில் பாரிய பல வகையான அபிவிருத்திகளை செய்தற்கான ஒரு வாய்ப்பாகக் கருதினேன். அதை இல்லாமல் செய்து விட்டார்கள் என்றார்.
கிழக்கில் தமிழ் முதலமைச்சர் முஸ்லிம் ஆளுனர் நியமிக்கப்பட அரசு ஆர்வம் காட்டியது.
புதிய அரசு கிழக்கில் முஸ்லிம் ஒருவரை ஆளுனராகவும் தமிழர் ஒருவரை முதலமைச்சராக்கவும் விரும்கியது. ஆனால் முஸ்லிம் காங்கிரஸ் இதை விரும்பவில்லை. மு.கா இன்னும் தனக்குத்தான் முதலமைச்சர் வேண்டும் என்ற வெறியில் உள்ளது. எத்தனையோ சிரேஷ்ட போராளிகள் உள்ள நிலையில் ஏறாவூர் நஸீருக்கு ஹக்கீம் முதலமைச்சர் வழங்கவுள்ளார்.
நஸீர் கட்சிக்குள் நேற்று வந்தவர். நஸீரின் பணம் வேலை செய்துள்ளது. ஹக்கீம் கல்முனையை கடந்த 15 வருடங்களாக ஓரங்கட்டி வருகின்றார்.
மட்டக்களப்பில் ஒரேயொரு மாகாண உறுப்பினர் நஸீர். ஆனால் அம்பாறையில் 4 உறுப்பினர்கள் உள்ளார்கள். அம்பாறைக்கு வழங்க வேண்டிய முதலமைச்சர் பதவி ஏறாவூருக்குச் செல்கின்றது. அம்பாறை மு.கா தொண்டர்கள் ஐயோ பாவம்.
மு.கா முஸ்லிம் ஆளுனர் விடயத்திலும் பாரிய முட்டுக்கட்டை போட்டு விட்டது.மஜீட்டை முஸ்லிம் ஆளுனராக நியமிப்பதில் தங்களுக்கு எவ்விதமான சிக்கலுமில்லை என்று தமிழ் கூட்டமைப்பு ஏற்கனவே அரசிடம் தெரிவித்திருந்தது.
அத்துடன் அம்பாறை மாவட்ட கூட்டமைப்பு கொழும்பில் கூடிய போது கூட மஜீட்டுக்கு ஆளுனர் பதவி கொடுப்பதில் தங்களுக்குச் சம்மதம் என்று தங்களின் நல்லண்ணத்தைக் காட்டியது. ஆனால் அதையெல்லாம் மு.கா புறம் தள்ளியது.
மு.கா. தமிழர் ஒருவர் முதலமைச்சராக நியமிக்கப்படக் கூடாது என்று இன்று வரையும் வரிந்து கட்டிக் கொண்டுள்ளது. ஆக இந்த முஸ்லிம் அணி தமிழர்களுக்கு மட்டுமல்ல முஸ்லிம்களுக்கும் ஒரு விரோதப் போக்கைத்தான் கொண்டுள்ளது.
பிட்டும் தேங்காயும் என்றும் தழிழ் தேசியக் கூட்டமைப்பு உள்ள அணியில் மு.கா உள்ளது பெருமையாக உள்ளது என்று ஹக்கீம் அண்மையில் தெரிவித்திருந்தார்.
அதாவது மைத்திருக்கு கூட்டமைப்பு ஆதரவளிக்கும் என்ற செய்தி வெளியான போது இவ்வாறு ஹக்கீம் தெரிவித்திருந்தார். ஏன் பல தேர்தல்களில் ஹக்கீம் மேடைகளில் முழங்கியிருந்தார். ஆனால் கூட்டமைப்புக்கு 2 வருடம் முதலமைச்சர் பதவியை விட்டுக் கொடுக்கும் அளவுக்கு ஹக்கீம் இல்லை.
இதுதான் மு.கா வுக்கும் கூட்டமைப்புக்குமான நல்லுறவு. மு.கா வுக்கும் கூட்டமைப்பிற்குமான நல்லுறவு உள்ளதாக சம்பந்தன்தான் சொல்கின்றாரேயொழிய ஒரு தடவையாவது ஹக்கீம் சொன்னதில்லை.
தமிழர்களுக்கு எதிரான செயல்பாடுகளில் மு.கா.
முஸ்லிம் காங்கிரஸ் எப்போதும் தமிழர்களுக்கு எதிராக முஸ்லிம் மக்களை உசுப்பேற்றி தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாட்டைத்தான் கொண்டுள்ளது என்பது வெளிப்படையான உண்மை.
கடந்த வருடம் கூட வெளிநாட்டுக் குழுவிடம் இலங்கையில் மனித உரிமை மீறப்படவில்லை என்று மஹிந்தவுக்கு ஆதரவாக சான்றிதழ் கொடுத்திருந்தார்.
இதுகுறித்து அப்போது எங்களது கண்டனத்தைத் தெரிவித்திருந்தோம். எழுதியிருந்தோம். கடந்த ஆண்டிலும் ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டிலும் அரசுக்கு ஆதரவாகவே செயல்பட்டார்.
கடந்த வாரம் அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலாளர் நிஷா பிஸ்வாலைச் சந்தித்த மு.கா தலைவர் ஹக்கீம் நாட்டின் இறையாண்மையைப் பாதிக்கும் வகையிலான சர்வதேச விசாரணை செயற்பாடுகள் தற்போது அவசியமல்ல என்றும் சர்வதேச விசாரணைப் பொறிமுறையை விடவும் சுயாதீன உள்ளக விசாரணை நடத்துவது நல்லதாம் என்றும் சிபார்சு பண்ணியுள்ளார்.
மஹிந்தவை போர்க்குற்ற விசாரணையில் இருந்து காப்பாற்றுவோம் என்றும் மஹிந்தவை சர்வதேச விசாரணைக்கு விடமாட்டோம் என்றும் கடந்த வருடம் ஹக்கீம் சூழுரைத்திருந்தார். அதைத்தான் இப்போது ஹக்கீம் கடைப்பிடித்து வருகின்றார்.
எப்போதும் அரசுக்கு விசுவாசமாகச் செயற்படுவதில் ஹக்கீமுக்கு நிகர் யாருமே இருக்க முடியாது. எப்போதும் அரசுக்கு விசுவாசமாகத்தான் குரல் கொடுப்பார். அதில் மனித உரிமை இருந்தால் என்ன கொலைக்களம் இருந்தால் என்ன. யார் எப்படிப் போனால் என்ன. நமக்குப் பதவிதான் முக்கியம் நல்ல மனிதன்.
ஒரு ஈவிரக்கமில்லாமல் ஒன்றரை இலட்சம் மக்கள் துடி துடிக்க கால் உயிர், அரை உயிர், முக்கால் உயிர் என்றும் பச்சிளம் குழந்தைகள். முதியோர்கள் என்றும் வகை தொகையின்றி கோத்தபாய ராஜபக்ச வடக்கில் கொன்று குவித்துள்ளார்.
இந்தக் குற்றத்தை மறைப்பதும் இந்தப் படுபாதகச் செயலுக்கு ஆதரவாகவும், வக்காளத்து வாங்குவதும் மனித நேயமா அல்லது மனிதப் பிறவிகளா. யாராக இருந்தாலும் இந்த மகா குற்றத்திற்கு எதிராக சர்வதேச விசாரணை விசாரணை நடந்தால் மட்டும்தான் நீதி கிடைக்கும். மனித உரிமை மீறப்படுகின்ற போது முஸ்லிம்களாகிய நாம் மனித உரிமைகளை மதித்துக் குரல் கொடுக்க வேண்டும்.
படுகொலை செய்யப்பட்ட மனித உடல்கள் மீது ஏறி அமர்ந்து உணவு உண்ணக் கூடாது. அதைத்தான் இந்த ஈனப் பிறவிகள் செய்து கொண்டிருக்கின்றார்கள். சிங்கள தேசத்திற்கு வாத்தியம் வாசிக்க முடியாது.வாசிக்கின்றார்கள்.
இன்று தமிழ் மகக்ளுக்கு என்றால் நாளை முஸ்லிம்களுக்கு என்பதை நாம் மறந்து விடுகின்றோம். மஹிந்த அரசுதான் மாறியுள்ளது. மஹிந்த ஆதரவான படைகளும் கோத்தபாய படையணிகளும் இன்னும் மாறவில்லை என்பதை தமிழ் முஸ்லிம் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
போர்க்குற்றம் பற்றிய நாட்டுக்குள் நடக்கக் கூடிய உள்ளக விசாரணையின் சாதக பாதகம் பற்றி நாம் பின்பு வேறொரு ஆய்வில் பார்ப்போம்.
உள்ளக விசாரண என்பது அரசுக்கும் படையினருக்குமான யுத்தம்
உள்ளக விசாரணை என்பது கொலைக்களம் புரிந்துள்ள கோத்தபாயவின் படைகளுக்கு எதிரான விசாரணை. இந்த விசாரணை என்பது அரசுக்கும் படையினருக்கும் எதிரான போர்.யுத்தம்.
அரசு இப்போதுள்ள நிலையில் இந்த யுத்தத்தைச் செய்யுமா. கோத்தபாய படையணியொன்று வடக்கில் அரசுக்கு எதிரான சூழ்ச்சியில் ஈடுபட்டுள்ளதாக அரசாங்கமே சொல்கின்றது.
இந்த நிலையில் உள்ளக விசாரணையில் ஒரு வீதம் கூட திருப்தியடைய முடியாது. கொலைக்களம் புரிந்தவர்கள் இன்னும் பதவியில் உள்ளார்கள். இவர்களை அரசு தண்டிக்குமா.அப்படியான தண்டனையொன்று வழங்கப்படுமானால் உள்நாட்டில் அரசுக்கு எதிராக படையினரின் பாரிய நடவடிக்கைள் அமையும். அதன் மூலமாக மஹிந்தர் மீண்டும் சிம்மாசனம் ஏறலாம்.
படைகளுக்குள் பாரிய பிரச்சினைகள் உருவாகும். பொலிஸ் படையினருக்குள்ள சகல அதிகாரங்களும் சகல படையினருக்கும் உள்ளதாக ஜனாதிபதி கடந்த வாரம் அறிவித்துள்ளார்.
அதனால் படைகளுக்குள் இப்பவே பாரிய நிருவாகச் சிக்கல்கள் உருவாகும். இந்த நிருவாகச் சிக்கல் என்பது படைகளுக்குள் பாரிய மோதலை உருவாக்கலாம். பொலிஸ் படையினருக்குள்ள அதிகாரங்கள் ஏனைய படையினருக்கும் உள்ளது என்ற உத்தியோகபூர்வமான செயல்பாடுகள் இன்னும் அமுலுக்கு வரவில்லை என்ற போதிலும் நடைமுறைக்கு வருகின்ற போது பாரிய சிக்கல்கள் உருவாகும்.
அப்படியானால் இந்த உள்ளக விசாரணையில் ஏதும் நீதி,நியாயம், நன்மைகள் நடந்து விடுமா. இவைகளையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் ஹக்கீம் சொல்லும் உள்ளக விசாரணையில் ஏதும் பலன் கிடைக்குமா? ரொம்ப சின்னப்பிள்ளைத் தனமாக இல்லையா.
இது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போன்றில்லையா. தமிழ் மக்களுக்குச் செய்யும் பச்சைத் துரோகமில்லையா. கொஞ்சம் கூட மனிதாபிமானம் இல்லாது இந்த முஸ்லிம் அணி நடந்து கொள்வது தமிழ்- முஸ்லிம் இன உறவில் பாரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
மட்டுமென்றி தமிழ் மக்களின் எதிரி சிங்களவர்கள் அல்ல, முஸ்லிம்கள்தான் என்ற அவச் சொல்லுக்கும் பாவச் சொல்லுக்கும் இன்று முழு முஸ்லிம் சமூகமும் உள்ளாக்கப்பட்டுள்ளது.
ஒருவரின் சுயலாபத்திற்காக முழுச் சமூகமும் பலியாக்கப்பட்டு வருகின்றது. கேட்பதற்கு நாதியற்ற ஒருசமூகமாக இன்றைய முஸ்லிம் சமுதாயம் உள்ளது.
கிழக்கில் முஸ்லிம் மக்களிடம் மாற்றம் வேண்டும்
கிழக்கு மாகாணத்தில் மாற்றம் வேண்டும்.எதிர்வருகின்ற பொதுத் தேர்தலில் முஸ்லிம் மக்கள் மாற்றம் வேண்டி வாக்களிக்க வேண்டிய பாரிய தேவைக்குள் உள்ளார்கள்.
முஸ்லிம் மக்கள் மாற வேண்டும். எங்கிருந்தோ வந்த ஒருவருக்காக முழுச் சமுகமும் அவமானப்படுவது மாற வேண்டும். இன்னும் இன்னும் தமிழ் முஸ்லிம் இன உறவு வரிவடையக் கூடாது.
தமிழ் முஸ்லிம் இன உறவு வளர்க்கப்பட வேண்டுமானால் கிழக்கில் முஸ்லிம் மக்களிடம் மாற்றம் வேண்டும். மாறுதல் வேண்டும் நமக்குக் கிடைக்கும் அரிய சந்தர்ப்பம் அரிய வாய்ப்புத்தான் எதிர்வரும் பொதுத் தேர்தல். இந்தப் பொன்னான வாய்ப்பை முஸ்லிம் மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
முஸ்லிம்கள் விடுதலை பெற வேண்டும்.எங்கிருந்தோ வந்துள்ள ஒருவரின் பிடிக்குள் அகப்பட்டுக் கொண்டுள்ள முஸ்லிம் மக்கள் விடுதலை பெற வேண்டும். அந்த விடுதலை பெற வேண்டுமானால் எதிர்வருகின்ற பொதுத் தேர்தலில் கிழக்கு முஸ்லிம்கள் மாற்றம் வேண்டி வாக்களிக்க வேண்டும்.
(நன்றி-தமிழ்வின்)