முக்கிய அமைச்சு வழங்கப்படாவிட்டால் புரிந்துணர்வு மீள்பரிசீலனை - தமிழ் தேசிய கூட்டமைப்பு

முதலமைச்சர் பதவியை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பெற்றுக்கொண்டாலும் அதற்கு அடுத்த நிலையில் முக்கியத்துவம்மிக்க அமைச்சு பதவி தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வழங்கப்படவேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் இரு கட்சிகளுக்கிடையில் மேற்கொள்ளப்பட்டுள்ள புரிந்துணர்வினை மீள்பரிசீலனை செய்யவேண்டிய நிலையேற்படும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமாக கோவிந்தன் கருணாகரம்(ஜனா) தெரிவித்தார்.


மட்டக்களப்பு ,மண்முனைப்பற்று பிரதேசத்துக்குட்பட்ட புதுக்குடியிருப்பு கண்ணகி மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி இன்று வியாழக்கிழமை (19)புதுக்குடியிருப்பு பொது விளையாட்டு மைதானத்தில் அதிபர் வே.தட்சணாமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

இந்த நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் கிழக்கு மாகாணசபையிலும் ஏற்பட்டுள்ளது. கடந்த பத்து ஆண்டுகளாக இராணுவத்துக்கு ஒப்பான ஆட்சி இங்கு நடைபெற்று வந்தது.அந்த நிலை இன்று மாற்றத்திற்கு வந்துள்ளது.

கடந்த காலத்தில் கிழக்கு மாகாணத்தினை ஆட்சி செய்தவர்கள் எமது பகுதியை புறக்கணித்தனர்.கடந்த ஜனாதிபதி தேர்தல் மூலம் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் கிழக்கு மாகாணத்திலும் ஆட்சிமாற்றத்தினை ஏற்படுத்த வழியேற்படுத்தப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணசபையில் அதிகூடிய ஆசனங்களைப்பெற்றுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆட்சி அதிகாரத்தினைப்பெற்றுக்கொள்ளும் வகையில் இறுதிவரை முயற்சிசெய்தது.ஆனால் அந்த முயற்சி கைகூடவில்லை.
தமிழன் ஒருவன் முதலமைச்சராக வருவதற்கு அதிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பினை சேர்ந்த ஒருவர் முதலமைச்சராக வருவதற்கு எங்களுக்கு உதவிசெய்வதற்கு யாரும் இல்லாத நிலையே இருந்தது.

ஏழு ஆசனங்களுடன் இருந்த முஸ்லிம் காங்கிரஸ் மாற்று கட்சிகளை இணைத்து தங்களது ஆசனங்களை பத்தாக அதிகரித்து,ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்புடன் கடந்த கால ஒப்பந்தத்தை புதுப்பித்து முதலமைச்சர் பதவியை பெற்றுள்ளனர்.

அண்மையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் சம்பந்தன் ஐயாவை மகா பாரதத்துடன் ஒப்புட்டு கருத்து தெரிவித்துள்ளார். ஏகலைவனின் கட்டை விரலை துரோணர் காணிக்கையாக கேட்டது கபடத்தனத்தின் அடிப்படையில் .
சம்பந்தன் ஐயாமுதலமைச்சர் பதவியை கோரியது யதார்த்தத்தின் அடிப்படையில். மகாபாரதத்தின் ஏகலைவன் குருதட்சனை தொடர்பான சம்பவத்தின் தவறான புரிதலின் அடிப்படையில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தனது கருத்தினை கூறியுள்ளார் .

தனது மாணவன் அருச்சுனனை வெல்லக்கூடிய அல்லது நிகரான ஒரு வில்வீரன் இருப்பது கூடாது என்ற உள்நோக்கமே ஏகலைவனின் கட்டை விரலை துரோணர் குருதட்சணையாக கேட்டமைக்கான காரணமாகும் .சம்பந்தன் ஐயா கிழக்கில் முதலமைச்சர் பதவியை கோரியது முஸ்லிம் ஒருவர் முதலமைச்சராக வரக்கூடாது என்ற கபடத்தனத்திலோ, அல்லது அவர்களுக்கு உரித்தான ஒன்றை வஞ்சகமாக பெற வேண்டுமென்ற உட்கருத்தின் அடிப்படையிலோ அல்ல. மாறாக ஜனநாயக விழுமியங்களின் அடிப்படையில் மைத்திரி மாற்றம் ஏற்படுத்திய விளைவின் பலனாக கட்சிகளின் எண்ணிக்கையில் ஏற்பட்ட மாற்றமும் அதன் மூலம் பெரும்பான்மை உறுப்பினர்களை கொண்ட கட்சி என்ற அடிப்பையிலுமே தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு முதலமைச்சர் பதவி கோரப்பட்டது எனவே துரோணர் ஏகலைவனின் கட்டை விரலை கேட்டதற்கு சம்பந்தன் ஐயா முதலமைச்சர் பதவியை கேட்டதை எவ்வகையிலும் ஒப்பிட முடியாது இது பிழையான ஒப்பீடுமாகும்.

முடிந்து போன விடயமானாலும் இக்கருத்து எமது மக்க்களிடம் பிழையான எண்ணங்களை விதைத்துவிடும் என்பதினாலேயே இக்கரித்தினை முன்வைக்கின்றேனே ஒழிய இது தொடர்பான வாதத்தினை ஆரம்பித்து வைப்பதற்காக அல்ல .

இவர் ஒன்றை புரிந்துகொள்ளவேண்டும்.கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் 40வீதமும் முஸ்லிம் மக்கள் 37வீதமும் உள்ளனர்.2012ஆம் ஆண்டு தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு 11ஆசனங்களும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு 7ஆசனங்களும் கிடைத்தன.சம்பந்தன் ஐயா கட்டை விரலைக்கேட்பது பிச்சை கேட்பதற்கு சமன் என்ற தொனியில் அந்த கருத்தினை அவர் வெளியிட்டுள்ளார்.

கொள்கை ரீதியாக அரசியல் நடாத்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பு எவரிடமும் பிச்சை கேட்கப்போவதுமில்லை, இரந்து கேட்கப்போவதுமில்லை.தமிழ் தேசிய கூட்டமைப்பு இறுதிவரையில் ஆட்சி அதிகாரத்தினைக்கைப்பற்றும் முதலமைச்சர் கிடைக்கும் என்று இறுதிவரையில் முயற்சிகளை மேற்கொண்டோம்.

கிழக்கு மாகாணத்தில் எதிர்காலத்தில் இன ஐக்கியம் பேணப்படவேண்டும்.எங்களது எதிர்பார்ப்பு,எங்களது குறிக்கோள் தமிழீழம் கிடைக்காவிட்டாலும் இணைந்த வடகிழக்கு உருவாகவேண்டும்.அதற்கு இன ஐக்கியம் தேவை என்ற எதிர்காலத்தினைக் கருத்தில்கொண்டுஈ,எமது மக்களின் எதிர்காலத்தினைக்கருத்தில்கொண்டே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமையில் உருவாகும் ஆட்சியில் பங்குபற்றவேண்டும் என்ற முடிவை எடுத்துள்ளோம்.

முதலமைச்சர் பதவியை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பெற்றாலும் ஏனைய நான்கு அமைச்சு பதவிகளும் பகிரப்படாமலேயே உள்ளது. முதலமைச்சர் பதவியை அவர்கள் பெற்றுக்கொண்டாலும் அதற்கு அடுத்த நிலையில் முக்கியத்துவம்மிக்க அமைச்சு பதவி தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வழங்கப்படவேண்டும்.அவ்வாறு இல்லாவிட்டால் இரு கட்சிகளுக்கிடையில் மேற்கொள்ளப்பட்டுள்ள புரிந்துணர்வினை மீள்பரிசீலனை செய்யவேண்டிய நிலையேற்படும்.

நாங்கள் இன்று இந்த ஆட்சியில் பங்குதாரர்களாக வரவேண்டும்,எமது சமூகத்தின் எதிர்காலம் நல்லதாக மாறவேண்டும்.இணைந்த வடகிழக்கில் தமிழ் மக்கள் சுயாதீனமாக ஆட்சியமைத்துவாழவேண்டும்,என்பதற்காகவே இந்த நகர்வினை தமிழ் தேசிய கூட்டமைப்பு மேற்கொண்டுள்ளது.