வந்தாறுமூலையில் இனந்தெரியாதவர்களினால் இளைஞன் கடத்தல்

மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வந்தாறுமூலை பகுதியில்இளைஞர் ஒருவர் கடத்துச்செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வந்தாறுமூலை,களுவண்கேணி வீதியை சேர்ந்த விஜயன் விஜயகுமார் என்னும் இளைஞனே இவ்வாறு கடத்திசெல்லப்பட்டுள்ளதாகவும் இரண்டு வாரங்களாகியும் அவர் தொடர்பான விபரங்கள் எதுவும் தெரியாத நிலையிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நான்கு பேர் சிவிலுடையில் ஆயுதங்களுடன் வந்து குறித்த இளைஞனை விசாரணையொன்றுக்கு வருவமாறு கூறி அழைத்துச்சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

மாவீரர் தினம் நடத்தப்பட்டது தொடர்பில் விசாரணைசெய்யவேண்டும் என்று கூறியே அழைத்துச்செல்லப்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக அப்பகுதியில் அச்ச நிலையேற்பட்டுள்ளதாகவும் அப்பகுதி தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் குறித்த இளைஞன் 2010ஆம் ஆண்டு டிசம்பர் மாதமும் படையினரால் கொண்டுசெல்லப்பட்டு நான்கு வருடங்களின் பின்னர் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில் இவ்வாறு மீண்டும் கடத்தப்பட்டுள்ளதாக அப்பகுதி தகவல்கள் தெரிவிக்கின்றன.