மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தேசிய மற்றும் மாகாண ரீதியில் விளையாட்டுத்துறையில் சாதனை படைத்த வீரர்களை கௌரவிக்கும் நிகழ்வாகும்.
கிழக்கு மாகாண விளையாட்டுத்துறை அமைச்சும் கிழக்கு மாகாண விளையாட்டுத்திணைக்களமும் இணைந்து இந்த விளையாட்டு நிகழ்வினை ஏற்பாடுசெய்திருந்தது.
வருடாந்தம் நடத்தப்பட்டுவரும் இந்த வர்ண வீரர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு கடந்த இரண்டு வருடங்களாக நடாத்தப்படாத நிலையில் இந்த ஆண்டு நடத்தப்படுகின்றது.
கடந்த காலத்தில் மூன்று மாவட்டங்களையும் இணைத்து இந்த விருது வழங்கும் நிகழ்வு நடாத்தப்பட்டுவந்த நிலையில் இந்த ஆண்டு தனித்தனியாக நடத்தப்பட்டது.
கிழக்கு மாகாண விளையாட்டுத்திணைக்களத்தின் பணிப்பாளர் வி.மணிவண்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண விளையாட்டுத்துறை அமைச்சின் உதவிச்செயலாளர் எம்.ஐ.திர்னாஸ் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
அத்துடன் அம்பாறை,மட்டக்களப்பு,திருகோணமலை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த விளையாட்டு உத்தியோகத்தர்கள்,பிரதேச செயலகங்களின் விளையாட்டு உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.
இதன்போது 2013ஆம் ஆண்டு தேசிய ரீதியில் சாதனை படைத்த ஏழு பெண் வீராங்கனைகளும் 2014ஆம் ஆண்டு சாதனை படைத்த இரண்டு பெண் வீராங்கனைகளும் 26 வீரர்களும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இதன்போது விளையாட்டு வீரர்களுக்கான விளையாட்டு உடைகளும் உபகரணங்களும் வழங்கிவைக்கப்பட்டன.