மாகாணசபை ஆட்சி விடயத்தில் விட்டுக் கொடுப்புக்கு இடமில்லை ஆணித்தரமாக இருக்கின்றோம் -பிரசன்னா இந்திரகுமார்

கிழக்கு மாகாணசபை முதலமைச்சர் விடயத்தில் தமிழ்; தேசியக் கூட்டமைப்பு ஆணித்தரமாக இருக்கின்றது. நாமும் எமது தலைமைகளும் உறுதியுடன் இருக்கின்றோம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பிரசன்னா இந்திரகுமார் தெரிவித்தார்.


கடந்த வருட மாகாணசபை பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் மீன்பிடி உபகரணங்கள் வழங்கும் நிகழ்விலேயே அவர் இக்கருத்தினை தெரிவித்தார்.

மாகாணசபை உறுப்பினரின் மட்டக்களப்பு அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் வவுணதீவு மற்றும் மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மீனவர்களுக்கு மீன்பிடி உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன.

இதன் போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் ,

மறக்கப்பட்டது எமது இனம் அதனை அனைவருக்கும் நினைவூட்டுவோம் நாம் தினம் தினம் என்பதற்கு அமைவாக எமது இனம் பல படுகொலைகள் பல இனஅழிப்புகள் என பலவாறான துன்ப துயரங்களுக்கு மத்தியில் நாம் வாழ்கின்றோம்.
கடந்த 08ம் திகதி முன்பிருந்த அரசாங்கத்தின் கொடுங்கோல் ஆட்சிக்கு எதிராக வாக்களித்து ஒரு மாபெரும் மாற்றத்தினை ஏற்படுத்தி இன்று ஒரு புதிய பரினாமத்தினை ஏற்படுத்திய பெருமை எமது தமிழ் மக்களையே சாரும்.

கடந்த காலங்களில் நாம் சுவாசிப்பதற்கு கூட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன எமது நிகழ்வுகள் கூட பல சிக்கல்களுக்கும் கட்டுப்பாடுகளுக்கும் மத்தியிலேயே இடம்பெற்றதுடன் பல நிகழ்வுகள் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவங்களும் இருக்கின்றன.

இன்று எமது மக்களினால் ஒரு தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றது. உலக வரலாற்றில் முதல் பெண் பிரதமர் என்ற பெருமைக்குரியவர் ஸ்ரீமாவோ பண்டாரநாயகா அம்மணி அவர்கள் இருப்பது போன்று ஜனாதிபதியாக இருந்து ஜனாதிபதித் தேர்தலில் தோல்விகண்ட முதல் ஜனாதிபதியாக முன்னால் ஜனாதிபதி மஹிந்த அவர்களே திகழ்வார். எமது மக்களின் பலத்தினால் தான் இந்த அராஜக ஆட்சி மாற்றத்திற்கு வந்தது. அது போலவே உமது உறவுகளின் பலத்தின் மூலம் தான் தொடர்ந்தும் நாம் எமது தீர்வுகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.

எங்களுடைய போராட்ட வடிவத்தின் ஒரு அம்சமாக கிடைக்கப்பெற்றதே இந்த மாகாணசபை அதில் வடக்கினையும் கிழக்கினையும் பிரித்து மாகாணசபைகள் இடம்பெறுகின்றன.

ஆனால் அதிலும் என்ன நடந்திருக்கின்றது இந்த மாகாணசபைகளுக்கு இருக்கின்ற அதிகாரங்களை குறைப்பதற்கு முன்னால் அரசு முயற்சித்த போது இங்கிருந்த முஸ்லீம் அரசியல்வாதிகளும் அரசுடன் ஒட்டியிருந்த தமிழ் அரசியல்வாதிகளும் அதற்கு ஆதரவளித்து இதன் பலத்தினைக் குறைத்தார்கள். அப்படியெல்லாம் செய்தவர்கள் இன்று மாகாணசபை ஆட்சியை மீண்டும் கேட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

எமது மக்களின் உயிர்த்தியாகத்தால் கிடைக்கப்பெற்ற மாகாணசபையை தற்போது ஜனநாயகஅடிப்படையில் நாம் ஆள வேண்டிய இந்த மாகாணசபையை தாங்கள் ஆளவேண்டும் என்று கேட்பது எந்தவகையில் நியாயம். நாம் இன்று ஆணித்தரமாக இருக்கின்றோம் எமது மக்களின் பலத்தினால் கிடைக்கப் பெற்ற மாற்றத்தினால் பெறப்பட்ட எமது கிழக்கு மாகாணசபை ஆட்சி மாற்றத்தின் தலைமையை எக்காரணம் கொண்டும் நாம் விட்டுக் கொடுக்கப்போவதில்லை. இந்த முடிவில் எமது தலைமைகளும் உறுதியுடனேயே இருக்கின்றனர் என்று தெரிவித்தார்.