முஸ்லிம் காங்கிரஸ்தான் துரோகம் செய்தது,முஸ்லிம் மக்கள் துரோகம் செய்யவில்லை –அரியநேத்திரன்

முஸ்லிம் காங்கிரஸ் தான் எமக்கு துரோகம் செய்ததே தவிர முஸ்லிம் மக்கள் ஒருபோதும் எமக்கு துரோகம் செய்தவர்கள் அல்ல பல இஸ்லாமிய புத்திஜீவிகள் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு சார்பான கருத்துக்களையே வெளியிட்டு வருகின்றனர் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.


தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் மற்றும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் நடராஜா ஆகியோரின் சென்றவருட வரவு செலவுத் திட்ட நிதியில் இருந்து துறைநீலாவணை சீடொ அமைப்பிற்கு பல்ஒலிகருவி (புரொஜெக்டர்) உம், கிரமத்தின் வறிய பெண்மணிக்கு தையல் இயந்திரம் வழங்கும் நிகழ்வும் நேற்று (01) கிராம அபிவிருத்திச் சங்க உறுப்பினர் திருச்செல்வம் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பாக்கியசெல்வம் அரியநேத்திரன், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மா. நடராசா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன் போது மேற்குறித்த பொருட்கள் மக்களுக்கு கையளிக்கப்பட்டதுடன் மக்களுடன் கலந்துரையாடல் நிகழ்வும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

அபிவிருத்தி, பன்முகப்படுத்தப்பட்ட நிதி என்பது யாரும் தருவார்கள் அதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு யாரும் வாக்களிக்கத் தேவையும் இல்லை வாக்களிக்கவும் இல்லை. அபிவிருத்தியைக் காட்டி நன்றிக்கடனுக்காக எமது தமிழ்மக்களிடம் வாக்குக் கேட்டவர்கள் தோற்றுப் போன வரலாறும் உண்டு. நன்றிக்கடனுக்கு பெயர் போன இனம் எமது தமிழ் இனம் என்பதை யாரும் மறுக்க முடியாது.

அபிவிருத்தி என்ற நாடகத்தினை நடாத்தி வாக்குகளை கேட்டவர்களை இன்று சிங்கள மக்களும், முஸ்லீம் மக்களும், இஸ்லாமிய மக்களும் நன்கு புரிந்து அவர்களை புறக்கணித்து விட்டார்கள். தமிழன் என்றால் அவன் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு தான் வாக்களிக்க வேண்டும் என்ற எண்ணம் எம்மக்கள் அனைவர் மனதிலும் எழ வேண்டும்.

இனிவரும் காலங்களில் எங்கெங்கோ மறைந்து கிடந்த மாற்றுக் கட்சிகள் எல்லாம் வருவார்கள். ஆனால் நாம் ஒரு உறுதியுடன் இருக்க வேண்டும். இஸ்லாமிய மக்களை எடுத்துக் கொண்டால் அவர்கள் மாற்றுக் கட்சிகளுக்கு வாக்களிப்பது என்பது குறைவு ஆனால் எமது தமிழ் மக்களில் ஒரு சிலர் தான் அதிகளவாக மாற்றுக் கட்சிகளை ஆதரிக்கின்ற நிலையும் ஏன் சகோதர இனத்தவருக்கு வாக்குப் போடும் நிலையும் இருக்கின்றது. இந்நிலையை மாற்ற வேண்டும்.

நாம் மாற்றுக் கட்சிகளுக்கு வழங்கும் ஒவ்வொரு வாக்குகளும் இன்னுமொரு இனத்திவரின் பெரும்பான்மை பிரதிநிதியை அதிகரிக்குமே தவிர எமது இனத்தின் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும். இது அவ்வாறான தேர்தல் முறை இந்த விகிதாசாரத் தேர்தல் முறையில் எமது மக்கள் மாற்றுக் கட்சிகளுக்கு வாக்களிப்பதை இல்லாமல் செய்ய வேண்டும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் தவிர்த்துக் கொள்ள வேண்டும். மிகவும் சாதுரியமாக சிந்தித்து செயற்பட வேண்டும்.

இன்னுமொரு விடயம் இருக்கின்றது. நாம் எமது கலை, கலாச்சாரம், பாரம்பரியத்தையும் மதிக்கின்றோம் என்றால் எமது தமிழ் கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்பினையும் ஆதரித்துத் தான் ஆக வேண்டும். எமது பண்பாடுகளில் தனத்துவம் பேண எண்ணும் நாங்கள் எமது இனத்திற்கான தனித்துவக் கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்பினையும் ஆதரவளித்து அதற்கு ஒத்துழைப்பு வழங்குவதும் அவசியமானதே. அறம் என்பது அரசியலிலும் இருக்கவேண்டும். தாய் மண்ணில் பற்றில்லாதவனுக்கு தாயிலும் பற்று இருக்காது எனவே தாய் மீது பற்று வைக்கும் நாம் எமது மண்ணிலும் எமது மண்ணுக்காக பாடுபடும் எமது இனத்தின் கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்பிலும் பற்று வைக்க வேண்டும்.

கிழக்கு மாகாணசபை குழப்பம் தொடர்பில் எமது தலைவர்கள் உறுதியுடன் இருக்கின்றார்கள். நாம் ஜனநாயகத்துடன் நியாயமான முறையில் எமது கருத்துக்களை பரிமாறி பேச்சுவாhத்தைகளை நடாத்திக் கொண்டிருக்கின்றோம். கிழக்கு மாகாணசபை தொடர்பில் இன்னும் ஓரிரு தினங்களில் நல்லதொரு முடிவுகள் வரும் என எதிர்பார்;கின்றோம்.
கிழக்கு மாகாணசபை விடயம் எமது தாயகக் கோட்பாட்டினை சிதறடித்து விடக் கூடாது என்பதில் நாம் மிகவும் உன்னிப்புடன் எமது நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம்.

முஸ்லீம் காங்கிரஸ் தான் எமக்கு துரோகம் செய்ததே தவிர முஸ்லிம் மக்கள் ஒருபோதும் எமக்கு துரோகம் செய்தவர்கள் அல்ல பல இஸ்லாமிய புத்திஜீவிகள் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு சார்பான கருத்துக்களையே வெளியிட்டு வருகின்றனர்.

எனவே இவ்வாறு நிலைமை சென்று கொண்டிருக்க போது எமது மக்கள் எமது கரங்ளை மேலும் மேலும் பலப்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.