பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், மாணவர்கள், நலன் விரும்பிகள் மற்றும் பொதுமக்கள் இணைந்து இப்பேரணியை ஏற்பாடு செய்திருந்தனர். மட்டக்களப்பு நகரிலுள்ள கிழக்கு பல்கலைக்கழகத்தின் சௌக்கிய பராமரிப்பு பீட முன்றலில் ஆரம்பமான இந்த கண்டனப்பேரணியானது மட்டக்களப்பு காந்திபூங்கா வரை சென்று, அங்கு கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது.
கிழக்கு பல்கலைகழகம் தொடர்பில் அண்மைக்காலமாக முன்வைக்கப்பட்டுவரும் குற்றச்சாட்டுகள் குறித்து சுயாதீன ஆணைக்குழுவினை நியமித்து விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்களினால் இதன்போது வலியுறுத்தப்பட்டது. கடந்த காலத்தில் இது தொடர்பில் பல்வேறு தடவைகள் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டபோதும் அவை கருத்திற்கொள்ளப்படவில்லையெனவும் புதிய அரசாங்கம் இதற்கு தகுந்த நடவடிக்கையெடுக்கவேண்டும் எனவும் வலிறுத்தினர்.
'அரசே காமுகர்களிடமிருந்து பெண்களை காப்பாற்று', 'சக ஊழியர்களுடனும் மாணவர்களுடனும் கண்ணியமாக நடக்கத்தெரியாத காட்டுமிராண்டிகளை வீட்டுக்கு அனுப்பு', 'அரச பொதுச் சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்தவர்களை சிறைக்கு அனுப்பு' போன்ற பதாகைகளை ஏந்தியவாறு கண்டனப் பேரணியில் கலந்துகொண்டனர்.
இந்த கண்டனப்பேரணி தொடர்பில் கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் கலாநிதி கோவிந்தன் கிட்ணராஜாவிடம் வினவியபோது, 'எனக்கு எதிரான இந்த கண்டனப்பேரணி சிலர் தனிப்பட்ட இலாபங்களுக்காகவே நடத்தினர். பல்கலைக்கழகத்தில் எமக்கு எதிராக போராடமுடியாதவர்கள் இவ்வாறு வீதியால் செல்பவர்களை வைத்து போராடுகின்றனர்.' 'இந்த கண்டன பேரணிக்கு பல்கலைக்கழக மாணவர்களை அழைத்தபோது அவர்கள் வராத நிலையில், தனியார் கல்வி நிலையம் ஒன்றிலிருந்து மாணவர்களை அழைத்துவந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளச்செய்துள்ளனர்.'
'அத்துடன் ஆட்சி மாற்றத்தை பயன்படுத்தி எனக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள போலி குற்றச்சாட்டுகளை மீண்டும் கொண்டுவர முயல்கின்றனர்.' 'கிழக்கு பல்கலைக்கழகத்துக்குள் ஊழல் இடம்பெற்றுள்ளதாக கண்டறிவதற்கு அமைக்கப்படும் எந்த ஆணைக்குழுவினையும் முழுமனதுடன் வரவேற்க நான் தயாராகவே உள்ளேன்.' என அவர் தெரிவித்தார்.