காத்தான்குடியில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் புதிய ஜனாதிபதிக்கு வாழ்த்து தெரிவிக்கும் நிகழ்வு

புதிய ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன பதவியேற்றதனை தொடர்ந்து அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையிலும் வாக்களித்த மக்களுக்கு நன்றி செலுத்தும் வகையிலும் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன.


நாடெங்கிலும் உள்ள புதிய ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவித்த கட்சிகளினால் இந்த நிகழ்வுகள் கட்சி அலுவலகங்களில் நடத்தப்பட்டுவருகின்றன.

இதன்கீழ் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வெற்றிக்காக பாடுபட்ட நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் ஏற்பாட்டில் மாபெரும் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை இரவு மட்டக்களப்பு,காத்தான்குடியில் உள்ள அதன் தலைமைக்காரியாலயத்தில் நடைபெற்றது.

நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளரும் பொறியியலாளருமான எம்.எம்.அப்துல் ரஹ்மான் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் கொள்கைபரப்பு செயலாளர் முபீன்,ஐ.தே.கட்சியின் காத்தான்குடி பிரதேச அமைப்பாளர் முஸ்தபா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டதுடன் வெற்றிக்காக பாடுபட்டவர்களுக்கு நன்றியும் தெரிவிக்கப்பட்டது.

சிறுபான்மை சமூகத்தின் பூரண ஆதரவுடன் தெரிவுசெய்யப்பட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நல்லாட்சியை ஏற்படுத்தவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டதுடன் புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.