கொக்கட்டிச்சோலை படுகொலை நினைவு தினம் 28ஆம் திகதி அனுஸ்டிப்பு

மட்டக்களப்பின் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த படுகொலையாக கருதபடும் கொக்கட்டிச்சோலை படுகொலையின் 28ஆவது ஆண்டு நினைவை முன்னிட்டு மண்முனை தென்மேற்கு(பட்டிப்பளை)தமிழரசுக்கட்சி கிளை ஏற்பாட்டில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெறவுள்ளது.


இதன் கீழ் எதிர்வரும் 28ஆம் திகதி பிற்பகல் 12.00மணிக்கு கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் விசேட பூஜைகள் நடைபெறவுள்ளதாக மண்முனை தென்மேற்கு(பட்டிப்பளை)தமிழரசுக்கட்சி கிளையின் தலைவர் சி.புஸ்பலிங்கம் தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் “கொக்கட்டிச்சோலை படுகொலையின் 28ஆவது ஆண்டு வணக்க நிகழ்வும் சமகால அரசியல்”கருத்தரங்கும் என்னும் தலைப்பில் விசேட நிகழ்வு நடைபெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அன்றைய தினம் பிற்பகல் 2.00மணியளவில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்வில் தமிழரசுக்கட்சியின் தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா பிரதம அதிதியாக கலந்துகொள்ளவுள்ளார்.

சிறப்பு அதிதிகளாக பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.சுமந்திரன், பொன்.செல்வராஜா, சீ.யோகேஸ்வரன் மற்றும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களும் கலந்துகொள்ளவுள்ளதாகவும் தலைவர் சி.புஸ்பலிங்கம் தெரிவித்தார்.

1987 ஜனவரி 28ஆம் திகதி கொக்கட்டிச்சோலை இரால் பண்ணையில் வேலையில் ஈடுபட்டிருந்த நூற்றுக்கு மேற்பட்டவர்கள் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தனர்.

இந்த கொலை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் ஜோசப்பரராஜசிங்கம் ஐ.நா.வின் கவனத்துக்கு கொண்டுசென்றதை தொடர்ந்து இக்கொலை பிரபல்யம் அடைந்தமை குறிப்பிடத்தக்கது.