மட்டு.வவுணதீவு பகுதியில் அதிகரிக்கும் யானைகளின் அட்டகாசம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பாவற்கொடிச்சேனை பகுதியில் யானை ஒன்று தாக்கியதன் காரணமாக கடையொன்று சேதமடைந்துள்ளதுடன் பயிர் நிலங்களும் அழிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.


இன்று அதிகாலை காட்டுப்பகுதியில் இருந்து புகுந்த யானையொன்று பாவற்கொடிச்சேனை பகுதியில் உள்ள சோளன் செய்கை மற்றும் விவசாய காணிகளில் சேதங்களை ஏற்படுத்தியுள்ளதுடன் மூன்று வீட்டு தோட்டத்தினையும் சேதப்படுத்தியுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் பாடசாலைக்கு முன்பாக இருந்த கடையொன்றினையும் உடைத்து சேதப்படுத்தியுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

கடந்த ஐந்து தினங்களாக குறித்த யானையின் நடமாட்டம் அப்பகுதியில் காணப்படுவதாகவும் இது தொடர்பில் வனஇலாகா அதிகாரிகளுக்கு அறிவித்தபோதிலும் எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையெனவும் பிரதேச மக்கள் கவலை தெரிவித்தனர்.

இன்று காலை அப்பகுதிக்கு சென்ற கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னம் அப்பகுதியை பார்வையிட்டதுடன் பொதுமக்களுடன் கலந்துரையாடல்களையும் நடத்தியுள்ளார்.

இது தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபரின் கவனத்துக்கும் கொண்டுசெல்லப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னம் தெரிவித்தார்.

இந்த யானைகளின் அட்டகாசங்களை கட்டுப்படுத்துவதற்கு இதுவரையில் முறையான எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.