தமிழன் தன்மானத்துடன் வாழவேண்டுமானால் மகிந்தவுக்கே வாக்களிக்க வேண்டும் -மீள்குடியேற்ற பிரதியமைச்சர்

தமிழ் மக்கள் இம்முறை யாருடைய பேச்சையும் கேட்காது தமது பிள்ளைகளின் எதிர்காலம் பற்றியும் தமிழினத்தின் எதிர்காலம் பற்றியும் மாவட்டத்தின் அபிவிருத்தி பற்றியும் சிந்தித்து முடிவு எடுக்க வேண்டும். அபிவிருத்திப் பணிகள் தொடர்ச்சியாக நடக்கவேண்டுமானால் தமிழன் தன்மானத்துடன் வாழவேண்டுமானால் மகிந்தவுக்கே வாக்களிக்க வேண்டும் என மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.


மட்டக்களப்பு,போரதீவுப்பற்று பிரதேச செயலகத்துக்குட்பட்ட தும்பங்கேணி கொச்சிபாமில் பல்நோக்கு மண்டபம் திறப்பு விழா நேற்று வியாழக்கிழமை பிற்பகல் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு திறந்துவைத்தார்.

நடக்கவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்ச அவர்களே வெற்றி பெறப்போகின்றார்.அதில் மாற்றுக் கருத்திற்கு இடமில்லை. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களை சிங்கள மக்களின் மனதிலிருந்து எவரும் நீக்க முடியாது. அவர் யுத்தத்தை நிறுத்தி நாட்டில் அமைதியை ஏற்படுத்திய பெருமைக்குரியவராவார். இன்று நாங்கள் நிம்மதியாக வாழ்கின்றோம்.

யுத்தமானது தொடர்ந்திருந்தால் நாம் இன்னும் அழிவுகளையே சந்தித்திருப்போம். யுத்தம் நிறைவுற்றமையால் நாம் பல உயிர்களை காப்பாற்றியிருக்கின்றோம். யுத்தத்திலிருந்து தப்பியவர்கள் இன்று தங்களுடைய கிராமத்தை வளர்ப்பதற்கு தலைமைப்பொறுப்பேற்று செயற்பட்டுவருகின்றனர்.அவர்களை நாம் பாராட்ட வேண்டும். ஆகவே தேர்தலில் வெல்லப்போகின்றவர் யார் என்பது எமக்குத் தெரியும். அதை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை சேர்ந்த எவராவது யுத்தத்தில் ஈடுபட்டிருக்கின்றனரா? அவர்களுடைய பிள்ளைகளோ அல்லது உறவினர்களோ யுத்தத்தில் மடிந்திருக்கின்றனரா? நிச்சயமாக இல்லை. அவர்களுக்கு எமது உணர்வுகளை விளங்கிக்கொள்ள முடியாது.அவர்கள் தங்களது கதிரைகளை தக்கவைத்துக்கொள்வதற்காகவும் நிதிகளைப்பெற்று தங்களை வளர்த்துக்கொள்வதற்காகவும் பலவற்றை உங்களுக்குச் சொல்வார்கள். அதை நம்பி நீங்கள் வாக்களித்தால் உங்களுக்கு எந்தப் பயனும் கிடைக்கப்போவதில்லை.

இன்று மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்திருப்பவை இனத்துவேஷம் நிறைந்த கட்சிகளாகும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அவர்களுக்கா உங்களை வாக்களிக்கச் சொல்லப்போகின்றது? கொழும்பிலிருக்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினரான சுமந்திரன் அவர்கள் சந்திரிகாவிடம் இருபது கோடி ரூபா பணத்தை பெற்றுக்கொண்டு மைத்திரிக்கு ஆதரவளிக்கச்சொல்லியிருக்கின்றார். அவருக்கு வடக்கு கிழக்கை பற்றி எதுவுமே தெரியாது. தமிழில் பெயர் மட்டும் தான் அவருக்குள்ளது.

மட்டக்களப்பில் வாழ்கின்ற மட்டக்களப்பு மக்களின் துன்பங்களை நன்கறிந்த மட்டக்களப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் உங்களுக்கு என்ன சொல்லப்போகினறார்கள். இனத்துவேஷிகளுக்கு வாக்களிக்கச்சொல்லப்போகின்றார்களா? மைத்திரி வெளியிட்டிருக்கும் தேர்தல் விஞ்ஞாபனத்தில் சிறுபான்மையினத்தைப் பற்றி ஒரு வசனம்கூட உள்ளடக்கப்படவில்லை. அவர் சிறுபான்மையினத்தை கணக்கில் எடுக்கவேயில்லை. தங்களுடைய பதவிகளுக்காகவுத் கொள்கைகளுக்காகவும் நூறு நாட்களில் மாற்றத்தை கொண்டுவரப்போவதாகக்கூறி போலியான வாக்குறுதிகளை மக்களுக்கு அளித்து பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். நூறு நாட்களில் அனைத்தையும் எப்படி மாற்ற முடியும் என்பதை நீங்கள் சிந்திக்க வேண்டும்.

இரு தடவைகள் ஜனாதிபதியாக பதவி வகித்த மகிந்த ராஜபக்ச அவர்கள் பாரபட்சமில்லாமல் இனத்துவேஷமில்லாமல் எங்கள் தமிழ் மொழியையும் கற்றுக்கொண்டு எங்களுக்காகவும் பணியாற்றி வருகின்ற ஒருவராவார். தமிழ் மக்கள் இம்முறை யாருடைய பேச்சையும் கேட்காது தமது பிள்ளைகளின் எதிர்காலம் பற்றியும் தமிழினத்தின் எதிர்காலம் பற்றியும் மாவட்டத்தின் அபிவிருத்தி பற்றியும் சிந்தித்து முடிவு எடுக்க வேண்டும். அபிவிருத்திப் பணிகள் தொடர்ச்சியாக நடக்கவேண்டுமானால் தமிழன் தன்மானத்துடன் வாழவேண்டுமானால் மகிந்தவுக்கே வாக்களிக்க வேண்டும்.

இன்று உங்களுடைய பிள்ளைகள் கைது, கடத்தல், காணாமல்போதல் போன்ற பிரச்சனைகளின்றி நிம்மதியாக வாழ்கின்றனர். நாங்கள் அரசாங்கத்துடன் இணைந்திருந்து இவற்றையெல்லாம் நிறுத்தியிருக்கின்றோம். அபிவிருத்திப்பணிகளை மேற்கொண்டிருக்கின்றோம். நாங்கள் எங்களுடைய தேவைகளை உரிமையுடன் கேட்கும்பொழுது எந்தத் தடையுமின்றி செய்து தருபவர் தான் ஜனாதிபதி மகிந்த. அப்படிப்பட்ட நன்கு பரீட்சயமான ஒருவரை நாங்கள் ஜனாதிபதியாக தெரிவுசெய்வோமா அல்லது பரீட்சயமல்லாத எதுவுமே தெரியாத ஒருவரை ஆதரிப்போமா என்பதை சிந்தித்து முடிவெடுக்க வேண்டும். இந்தத் தேர்தல் தமிழர்களுக்கு கிடைத்துள்ள அரிய சநதர்ப்பமாகும். ஏனென்றால் அரசுடன் இணைந்திருந்த பல முஸ்லிம் தலைவர்கள் இன்று அரசுக்கு துரோகம் இழைத்துவிட்டு எதிர்க்கட்சியி;ல் இணைந்துகொண்டுள்ளனர்.

முன்னரெல்லாம் முஸ்லிம் தலைவர்கள் வெல்கின்ற அரசாங்கத்தின் பக்கமே நின்றார்கள். அவர்களின் எதிர்ப்பினால் தமிழர்களுக்கான அபிவிருத்திகள் இல்லாமல் இருந்தன. ஆனால் இன்று பாரிய அபிவிருத்திகளை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்திருக்கின்றது. தமிழர்களை வளர்த்துக்கொள்வதற்கும் தமிழ்த் தலைவர்களை உருவாக்கிக்கொள்வதற்கும் நல்லதொரு வாய்ப்பு ஏற்பட்டிருக்கின்றது.

தமிழர்கள் அணிதிரண்டு ஜனாதிபதிக்கு வாக்களித்தோமானால் பெரிதளவிலான மாற்றத்தை கொண்டுவர முடியும். அரசிலிருந்து விலகி எதிர்க்கட்சிக்கு செல்பவர்களைப் பற்றியெல்லாம் நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. அரசாங்கம் எமக்கு நல்லதைச்செய்யும்போது நாமும் அதற்கு நன்றியுடையவர்களாக இருக்க வேண்டும்.மீள்குடியேற்ற அமைச்சராக முன்னர்  பதவி வகித்த றிசாட் பதியுதீன் அவர்கள்  எந்த மீள்குடியேற்றத்தையும் செய்யவில்லை. அவரும் இனத்துவேஷமுடைய ஒருவராவார். வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு போன்ற பகுதிகளில் தமிழர்களை கொடுமைப்படுத்தியவர்களில் அவரும் ஒருவராவார். அவர் அரசிலிருந்து பிரிந்துசென்றது நல்லதே.