வான் கதவுகள் திறக்கப்பட்டமையினால் மட்டக்களப்பில் வெள்ளம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் உள்ள பிரதான குளங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளமையினால் மட்டக்களப்பு மாவட்டத்தின் தாழ் நிலப்பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தின் மிகப்பெரும் குளங்களில் ஒன்றாக உன்னிச்சைக்குளம் திறக்கப்பட்டுள்ளதால் மட்டக்களப்பு நகர் வெள்ளத்தினால் மூழ்கியுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட நீர்பாசன திணைக்களத்தின் பொறியியல் பிரிவின் தகவலின் அடிப்படையில் உன்னிச்சை குளத்தின் மூன்று வான் கதவுகள் 10 அடிகள் திறந்துவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றன.

இதன் காரணமாக மட்டக்களப்பு நகர் உட்பட பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கிவருகின்றன.

அத்துடன் நவகிரிக்குளத்தின் வான் கதவுகள் அனைத்தும் ஆறு அடிகள் திறக்கப்பட்டுள்ளதால் போரதீவுப்பற்று,களுவாஞ்சிகுடி பிரதேசங்களில் வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளது.

இதேபோன்று றூகம் குளத்தின் வான்கதவுகள் இரண்டு திறக்கப்பட்டுள்ளதுடன் அவற்றின் ஊடாக எட்டு அடி நீர் வெளியேறிவருவதனால் செங்கலடி மற்றும் சித்தான்டி,கிரான் ஆகிய பகுதிகளில் வெள்ள அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து மழைபெய்துவருவதன் காரணமாக மேலும் வெள்ள அனர்த்தம் ஏற்படக்கூடிய சாத்தியங்கள் உள்ளதாக அனர்த்தமுகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.