குறிப்பாக மட்டக்களப்பு நகரில் இருந்து படுவான்கரை பகுதிகளுக்கான போக்குவரத்துகள் துண்டிக்கப்பட்டுள்ளதுடன் சில பகுதிகளில் இயந்திர படகுச்சேவை நடத்தப்பட்டுவருகின்றது.
படுவான்கரை பிரதேசத்தின் மிக முக்கிய போக்குவரத்துப்பாதையான வலையிறவு-மட்டக்களப்பு வீதி நீரில் மூழ்கியுள்ளதன் காரணமாக அதன் ஊடாக இயந்திரப்படகு சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாநகரசபையின் ஏற்பாட்டில் இந்த இயந்திர படகுச்சேவை நடத்தப்பட்டுவருவதுடன் இதற்கு படையினர் உதவி வருகின்றனர்.
வலையிறவு-மட்டக்களப்பு வீதி நீரில் மூழ்கியுள்ளதன் காரணமாக வவுணதீவுக்கான அனைத்து போக்குவரத்துப்பாதைகளும் துண்டிக்கப்பட்டுள்ளதுடன் புத்தூர்,வலையிறவு,திமிலதீவு பகுதிகளுக்கான போக்குவரத்துக்களும் துண்டிக்கப்பட்டுள்ளன.
இதன்காரணமாக மட்டக்களப்பு நகருக்கு பல்வேறு தேவைகளுக்காக வரும் மக்கள்,அரச உத்தியோகத்தர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கிவந்தநிலையில் இந்த போக்குவரத்துகள் ஆரம்பிக்கப்பட்டன.
இதேவேளை மட்டக்களப்பு நகரிலும் வெள்ளம் காரணமாக பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளதை காணமுடிகின்றது.
மட்டக்களப்பு பிரதான பஸ் நிலையம் மற்றும் பிரதான தனியார் பஸ் நிலையம் என்பன நீரில் மூழ்கியுள்ளதன் காரணமாக மட்டக்களப்பு மணிக்கூண்டு கோபுரத்துக்கு அருகில் இருந்தே சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதேபோன்று மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட புறநகர்ப்பகுதிகளான மஞ்சந்தொடுவாய், நாவற்குடா, கல்லடி,உப்போடை, சீலாமுனை,அமிர்தகழி, இருதயபுரம்,ஊறணி,உப்புக்கரச்சி போன்ற பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.