தமிழ் மக்களுக்கு உரிமையை தரக்கூடிய,தமிழ் பேசும் மக்களுக்கு ஆதரவாக இருக்ககூடிய ஒரேயொரு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ மட்டுமே என மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.
நாட்டை ஆளக்கூடிய தகுதியற்றவர்களே கூட்டணியை ஏற்படுத்தியுள்ளதாகவும் பிரதியமைச்சர் முரளிதரன் தெரிவித்தார்.
வாகரையில் இன்று நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழை காரணமாக மிகவும் கஸ்டங்களுக்குள்ளாகியுள்ள வாகரை பிரதேச செயலகத்துக்குட்பட்ட கட்டுமுறிவு பிரதேச மக்களுக்கான நுளம்பு வலைகள் வழங்கப்பட்டன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மிகவும் பின்தங்கிய பகுதிகளில் உள்ள மக்களினை மழை காலத்தில் நுளம்பு தாக்கத்தில் இருந்து பாதுகாக்கும்பொருட்டு ஐந்தாயிரம் நுளம்பு வலைகளை விநியோகிக்கும் பணிகள் ஆரம்பித்துவைக்கப்பட்டன.
முதல் கட்டமான வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கட்டுமுறிவு,தோணிதாண்டமடு ஆகிய பிரதேச மக்களுக்கான நுளம்பு வலைகள் வழங்கிவைக்கப்பட்டன.
மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின் ஏற்பாட்டில் இந்த நுளம்பு வலைகள் வழங்கிவைக்கப்பட்டன.ஷ
கட்டுமுறிவு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன் பிரதியமைச்சரின் இணைப்புச்செயலாளர் பொன்.ரவீந்திரன்,முன்னாள் வாழைச்சேனை பிரதேச தவிசாளர் ஜீவதாஸ் உட்;பட பலர் கலந்துகொண்டனர்.