வாழ்வின் எழுச்சி திட்டத்தின் கீழ் வீடு புனரமைப்பு நிதிவழங்கும் நிகழ்வு

(லியோன் ) 

மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழ்வின் எழுச்சி திணைக்களத்தின் மூலமாக வீடுகளை புனரமைப்பதற்காக பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் 200 மில்லியன் ரூபா ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது.


மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் உள்ள சமுர்த்தி உதவிபெறும் பயனாளிகளுக்காக இந்த நிதிகள் வழங்கப்படவுள்ளன.

இதன்கீழ் வீடுகளை புனரமைப்பதற்கு தலா 2500 ரூபா வீதம் 79125 குடும்பங்களுக்கான கொடுப்பனவு வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மண்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்குட்பட்ட பகுதிகளில் உள்ள மக்களில் வறுமை நிலையில் உள்ள சமுர்த்தி உதவி பெறும் 8560 குடும்பங்களுக்கான கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுவருகின்றன.

இது தொடர்பான நிகழ்வு இன்று பிரதேச அபிவிருத்திக்குழு தலைவரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் மட்டக்களப்பு மாநகர சபை நகர மண்டபத்தில்  நடைபெற்றது.

இதன்போது முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன்,மண்முனை வடக்கு பிரதேச செயலக கருத்திட்ட முகாமையாளர் செல்வி .பாலசுந்தரம் சாமினி ,பிரதேச திவிநெகும உத்தியோகத்தர் திருமதி கலைச்செல்வி வாமதேவா ,வாழ்வின் எழுச்சி திணைக்கள அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில்சேற்றுக்குடா ,திருப்பெருந்துறை, திமிலத்தீவு ,வீச்சுகல்முனை ,புளியந்தீவு கிழக்கு ,புளியந்தீவு மத்தி ,புளியந்தீவு மேற்கு ,புளியந்தீவு தெற்கு ,தாமரைக்கேணி ,கோட்டமுனை ,அரசடி ஆகிய கிராம சேவை பிரிவுகளுக்குட்பட்ட திவிநெகும 350 பயனாளிகளுக்கு வீடுகளை புனரமைப்பதற்கான கொடுப்பனவுகள்  இன்று வழங்கப்பட்டன.