ஐ.தே.க.காலத்திலேயே மட்டக்களப்பில் பல படுகொலைகள் நிகழ்த்தப்பட்டன –மீள்குடியேற்ற பிரதியமைச்சர்

ஐக்கியதேசியக் கட்சி ஆட்சியிலிருந்த காலத்தில்தான் தமிழர்கள் அதிகளவில் கொன்றழிக்கப்பட்டனர். அவர்கள் 1983ஆம் ஆண்டு ஜூலை கலவரத்தை தொடக்கி வைத்தவர்கள். யுத்தத்தை தொடக்கிவைத்ததே ஐக்கிய தேசியக் கட்சியினர் தான் இவ்வாறான கூட்டுகளை உடையே எதிர்க்கட்சியாகும்.இவர்களுக்கு தமிழ் மக்கள் வாக்களிப்பதா என்பது சிந்தித்து முடிவுசெய்யவேண்டும் என மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.


மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பாவற்கொடிச்சேனை பகுதியில் திவிநெகும பயனாளிகளுக்கான வீடு புனரமைப்பு நிதி வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

பதவிக்காக சொல்லாமல் ஓடிய ஒருவரை நாம் எப்படி நாட்டின் தலைவராக தெரிவு செய்யமுடியும்?அவரால் உங்களுக்கு என்ன உத்தரவாதம் தர முடியும்?அவர் ஒரு இனத்துவேஷியாவார். வேட்புமனுத்தாக்கல் செய்வதற்காக ஜனாதிபதி மகிந்தவும் மைத்திரியும் சென்றிருந்த சமயம் ஜனாதிபதி அவர்கள் மைத்திரியுடன் கைகுலுக்குவதற்கு கைகளை நீட்டியபோதும் மைத்திரி அவர்கள் கைகளை கட்டிக்கொண்டு பேசாமல் நின்றிருந்தார். அந்தப் பண்பு கூட இல்லாத ஒருவரை ஜனாதிபதியாக தெரிவு செய்தால் மீண்டும் நாம் காட்டிற்குச் செல்லும் நிலையே ஏற்படும்.

அவருடன் இணைந்திருக்கின்ற ஐக்கியதேசியக்கட்சி தற்போது உடைந்தநிலையில் உள்ளது. அதன் தலைவர் ரணில் அவர்கள் இருபத்தைந்து தடவைகள் தேர்தலில் போட்டியிட்டு தோற்றுப்போனவர். தமது கட்சியிலிருந்து ஒரு வேட்பாளரைக்கூட தேர்தலில் நிறுத்த முடியாத கேவலமான நிலையிலுள்ள ஒரு கட்சிக்கு மைத்திரிபால ஆதரவு தெரிவித்திருக்கின்றார்.

ஐக்கியதேசியக் கட்சி ஆட்சியிலிருந்த காலத்தில்தான் தமிழர்கள் அதிகளவில் கொன்றழிக்கப்பட்டனர். அவர்கள் 1983ஆம் ஆண்டு ஜூலை கலவரத்தை தொடக்கி வைத்தவர்கள். யுத்தத்தை தொடக்கிவைத்ததே ஐக்கிய தேசியக் கட்சியினர் தான். ஜே.ஆர்.ஜயவர்தன அவர்கள் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் தமிழர்கள் அதிகளவில் கொன்றழிக்கப்பட்டனர்.

கொழும்பில் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் எரித்துக் கொல்லப்பட்டனர். அதன் பின்னர் தான் நாங்கள் தமிழரை காப்பாற்றுவதற்காக யுத்தத்திற்கு சென்றோம். தொடர்ச்சியாக ஆட்சியிலிருந்த அவர்கள் அதிகளவான படுகொலைகளை செய்தனர்.அதேபோன்று மட்டக்களப்பு,அம்பாறை மாவட்டங்களிலும் ஐக்கிய தேசிய கட்சி காலத்திலேயே அதிக படுகொலைகள் நிகழ்த்தப்பட்டன. 1988ஆம் ஆண்டு ஓட்டமாவடிப் பாலத்தில் தமிழர்களின் கழுத்துகளை வெட்டி கொலை செய்தார்கள். பல்கலைக்கழகத்தினுள் தஞ்சம் கோரியிருந்த 360பொதுமக்களை கொலை செய்தார்கள்.

மிகப்பெரிய இனத்துவேஷம் பிடித்த கட்சியான ஜாதிக ஹெலஉறுமய கட்சி மைத்திரியுடன் இணைந்துள்ளது. இலங்கை தமிழருக்குரிய நாடல்ல,இது பௌத்த நாடு என்று கூறிவரும் அக்கட்சி தமிழனை முற்றாக அழிக்க வேண்டும் என்ற உறுதியுடன் இருக்கின்றது. மற்றொரு இனத்துவேஷக்கட்சியான ஜே.வி.பியும் மைத்திரியுடன் இணைந்துள்ளது.

நம் மக்களையெல்லாம் குண்டு போட்டு கொன்றழித்த பெருமைக்குரிய பெண்மணியான சந்திரிக்காவும் அவருடன் இணைந்திருக்கின்றார். அவர் ஜயசிகுறு சமர்,ஆனையிறவு சமர் போன்றசமர்களின்போது பொதுமக்களை பெருமளவில் கொன்றழித்தவர். நவாலித் தேவாலய படுகொலை, புதுக்குடியிருப்பு சந்தை குண்டுவெடிப்பு போன்றவை அவரின் ஆட்சியில்தான் இடம்பெற்றது. இவர்கள் அனைவரையும் கொண்ட கட்சி தான் மைத்திரிபால சிறிசேனவுடையது. அப்படிப்பட்ட இவருக்கு நாம் வாக்களிக்கலாமா என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும்.

இம்முறை தமிழத் தேசியக் கூட்டமைப்பினர் உங்களுக்கு என்ன சொல்லப்போகின்றார்கள்? கடந்த முறை ஒரு கொடூரவாதிக்கு வாக்களிக்கச்சொன்னார்கள். இம்முறை பல கொடூரவாதிகள் ஒன்றாகியிருக்கின்ற ஒருவருக்கு வாக்களிக்கச்சொல்லி தமிழினத்தை படுகுழியில் தள்ளப்போகின்றார்களா? அவர்கள் இன்னும் முடிவுகளை அறிவிக்கவில்லை. கொழும்பை பிறப்பிடமாக கொண்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்  சுமந்திரன் அவர்கள் தாம் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்கப்போவதாக கூறியிருக்கின்றார். அவர் ஒரு தமிழரா?அவருக்கு என்ன நடந்தது என்பதே தெரியாது. அவர் கொழும்பில் வசிப்பவர். நாங்கள் தான் துன்பத்தை அனுபவித்தவர்கள். மனோகணேசன் அவர்கள் தமிழருக்காக போராடுபவர் எனக் காட்டிக்கொண்டு மைத்திரிக்காக பிரசாரம் செய்துவருகின்றார். மனோகணேசனுக்கு தெரியுமா நாங்கள் வடக்கு,கிழக்கில் அழிந்தது?அவர் கொழும்பில் இருந்துகொண்டு எங்களை அழித்த அத்தனை பேருக்கும் வக்காளத்து வாங்கிவருகின்றார்.

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பிற்கு தமிழர் மேல் உண்மையான பற்று இருந்தால் இவர்கள் உங்களை மகிந்தவுக்கு வாக்களிக்கச் சொல்ல வேண்டுமென நான் அவர்களுக்கு வேண்டுகோள் விடுக்கின்றேன்.அப்படிச்செய்தால்தான் அவர்களை ஒரு தூய தமிழ்க் கட்சியாக நான் பார்ப்பேன். நான் இதுவரை அவர்களை தமிழ்த்தேசியக் கட்சியாக பார்த்ததில்லை. தமிழ்த் தேசிய கூத்தாடிகளாகத்தான் பார்த்திருக்கின்றேன். மக்கள் இவ்விடயத்தில் மிகக் கவனமாக இருக்க வேண்டும்.