மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைக்காலமாக அதிகரித்துவரும் மேய்ச்சல் தரைக்காணிகள் அத்துமீறல்கள் தொடர்பில் கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக காணி அபகரிப்புகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. 2009ஆம்ஆண்டு மே மாதம் பத்தொன்பதாம் திகதி போர் முடிவடைந்ததன் பின்னர் மட்டக்கள்ப்பு மாவட்டத்திலுள்ள அதிகளவான மேய்ச்சல் நிலங்களில் அத்துமீறி திட்டமிட்ட அடிப்படையில் சிங்களக்குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இம்மேய்ச்சல் நிலங்களில் காணப்படும் காணிகள் வனஇலாகாவிற்கு சொந்தமானவை. வனஇலாகா அக்காணிகளை மூன்று வருடங்களுக்கு குத்தகைக்கு கொடுத்திருந்தது. ஆனால் இம்முறை அவ்வாறு செய்யமுடியாது என அவர்கள் கூறிய பின்னரும்
கொழும்பில் இருக்கின்ற பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச அவர்களின் நேரடி உத்தரவுக்கமைய அக்காணிகள் வழங்கப்பட்டிருக்கின்றன.
இவ்விடயம் தொடர்பாக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினராகிய நாங்கள் மாவட்ட அரசாங்க அதிபரிடம் சென்று முறையிட்டிருந்தோம். அரசாங்க அதிபர் இம்முறைப்பாடுகளை தெளிவாக ஏற்றிருக்கின்றார். உரிய நடவடிக்கைகளை எடுப்பதாக உறுதியளித்திருக்கின்றார். இருந்தாலும் அரசாங்க அதிபரையும் அரச திணைக்களங்களையும் தாண்டி கொழும்பிலுள்ள அரசியல்செல்வாக்கு காரணமாக இந்நடவடிக்கை தொடர்ச்சியாக நடைபெற்றுவருகின்றது.
அதேபோல் கெவிலியாமடு பகுதியில் பௌத்தமதகுரு ஒருவர் திட்டமிட்டு குடியேற்றங்களை செய்திருந்தார். இவ்விடயம் தொடர்பாக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களாகிய நாங்கள் சட்டரீதியாக வழக்குத்தாக்கல் செய்திருக்கின்றோம். அவ்வழக்கு இன்னும் முடிவடையாமல் நிலுவையில் இருந்துகொண்டிருக்கின்றது.
ஐந்து வருடங்களுக்குள் ஒருஇலட்சத்து நாற்பத்தெட்டாயிரம் ஏக்கர் காணி பல்வேறு தேவைகளுக்காக அபகரிக்கப்பட்டிருக்கின்றன. இராணுவமுகாம்கள் அமைப்பதற்காகவும் பௌத்த விகாரைகளை அமைப்பதற்காகவும் அத்துமீறிய சிங்கள குடியேற்றங்களை அமைப்பதற்காகவும் அக்காணிகள் அபகரிக்கப்பட்டிருக்கின்றன.
மேய்ச்சல் தரைகள் ஒருவருக்கு இருபத்தைந்து ஏக்கர் ஐம்பது ஏக்கர் என்ற அடிப்படையில் பகிர்ந்தளிக்கப்பட்டிருக்கின்றன. காடுகள் அழிக்கப்பட்டிருக்கின்றன. காடழிப்பின் காரணமாகவே மக்கள் குடியிருப்புப் பகுதிகளினுள் யானைகளின் வரவும் அதிகரித்திருக்கின்றது. இதுவொரு பாரதூரமான பிரச்சனை என்பதை கடந்த பாராளுமன்ற அமர்வின்போது சுட்டிக்காட்டியிருந்தோம். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
மட்டக்களப்பு மாவட்டத்தில் யானைகள் தாக்கி இதுவரை இருபத்தேழு பேர் இறந்திருக்கின்றார்கள். பதினொரு பேர் காயமடைந்திருக்கின்றார்கள். நானூறு வீடுகள் அழிக்கப்பட்டிருக்கின்றன. 350விவசாயிகள் தங்கள் உள்ளீடுகளையும் உற்பத்திகளையும் இழந்திருக்கின்றார்கள். இவற்றுள் இறந்த இருபத்துநான்கு பேரின் குடும்பங்களுக்கு மாத்திரம் தலா ஒரு இலட்சம் வீதம் இழப்பீடு வழங்கப்பட்டிருக்கின்றது. வீடுகளை இழந்தவர்களுக்கோ மற்றவர்களுக்கோ எந்தவித இழப்பீடுகளும் வழங்கப்படவில்லை.
யானைத் தாக்குதலில் இருந்து தங்களை காத்துக்கொள்ள மக்கள் மாற்றுவழியை தேடவேண்டிய தேவை இருக்கின்றது. யானைகளுக்கெதிராக மக்கள் போராடவேண்டிய நிலை இருக்கின்றது. மக்களின் தாக்குதலால் படுவான்கரையில் ஒரு யானை இறந்துள்ளது. உண்மையில் மக்களை பாதுகாப்பதா யானைகளை பாதுகாப்பதா என்பதை தீர்மானிக்கின்ற சக்தியாக அரசாங்கம் இருந்துகொண்டிருக்கின்றது.
யானைகளிடமிருந்து மக்களை காப்பதற்கான எந்தவொரு ஆக்கப+ர்வமான நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் கூட இதைப்பற்றி கூறியிருக்கின்றோம். அரசாங்க அதிபர் இதுதொடர்பில் நடவடிக்கை எடுக்கும்படி கூறியிருந்தும் கூட வனஇலாகா திணைக்களம் இதை கவனத்தில் எடுக்கவில்லை.
