மட்டக்களப்பு நகரில் சிங்கள மக்கள் சிலர் ஆர்ப்பாட்டம்

(லியோன்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப்பகுதியில் வாழ்கின்ற சில பெரும்பான்மையின மக்கள் மட்டக்களப்பு நகரில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலகத்திற்குட்பட்ட புளுக்குனாவை பகுதி மக்களே இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

இன்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கள் தேர்தல் பிரசாரத்திற்காக மட்டக்களப்புக்கு வருகைதரவிருக்கும் நிலையில் தேர்தல் பிரசாரகூட்டம் நடைபெறவிருக்கும் பகுதிக்கு அருகிலேயே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுவருகின்றது.

யுத்தம் முடிவுக்கு வந்தபின்னர் குறித்த பகுதியில் தாம் மீள்குடியேற்றம் செய்யப்பட்டபோதும் தமக்கு அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரப்படவில்லை என்றும் வாக்குரிமை வழங்கப்படவில்லையென்றும் பிரதேச செயலகம் மாவட்ட செயலகம் என்பவற்றில் தமது பதிவுகள் எதனையும் பெற முடியாதுள்ளதாகவும் இதனை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவரும்முகமாகவே தாம் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருவதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

இந்த  ஆர்ப்பாட்டத்தில் எண்பதிற்கும் மேற்பட்டோர் கைக்குழந்தைகளுடன் கலந்துகொண்டனர். ஜனாதிபதியை சந்திக்கும் வரை தாம் ஆர்ப்பாட்டத்தை நிறுத்தப்போவதில்லை எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு பிரதான பொலிஸ் நிலையத்திற்கு முன்பான வீதியிலேயே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை குறித்த பகுதியில் இவர்கள் அத்துமீறி குடியேறியுள்ளதன் காரணமாகவே இவர்களுக்கான பதிவுகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லையென பட்டிப்பளை பிரதேச செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.